கோலாலம்பூர், செப்டம்பர் 12 – திறன்பேசிகளின் சந்தை அறிமுகங்களும், விற்பனைகளும் தொடங்கியது முதல், வணிக ஆய்வாளர்களிடையேயும், பொதுமக்களிடமும் அதிகமாக விவாதிக்கப்படும் தலைப்பு நடைபெறும் வர்த்தகப் போரில் வெல்வது சாம்சுங் நிறுவனமா அல்லது ஆப்பிள் நிறுவனமா என்பதுதான்!
கடந்த ஒரு வருட காலமாக திறன்பேசிகளை விரும்பும் பயனர்கள் அதிகம் விவாதித்த தலைப்பும் இதுவாகத்தான் இருக்கும்.
தென்கொரிய நிறுவனமான சாம்சுங், அமெரிக்க நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்திற்கு கடுமையான போட்டியையும் சவாலையும் வழங்கி வருகின்றது.
இந்த வருடத்தில் வர்த்தக ரீதியாக வெற்றி வாகை சூடப் போவது ஆப்பிளின் ஐபோன் 6 -ஆ அல்லது சாம்சுங்கின் கேலக்ஸி நோட் 4 திறன்பேசிகளா என்பதே தற்போது எழுந்துள்ள புதிய விவாதத் தலைப்பாகும்.
கடந்த செப்டம்பர் 3-ம் தேதி சாம்சுங் தனது கேலக்ஸி நோட் 4 திறன்பேசிகளையும், கடந்த 9-ம் தேதி ஆப்பிள் தனது ஐபோன் 6 திறன்பேசிகளையும் அறிமுகப்படுத்தின.
இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புகளோடு வெளியாகியுள்ள இந்த இரு நிறுவனங்களின் புதிய திறன்பேசிகளின் சில சிறப்பு அம்சங்களின் ஒப்பீடுகளைக் கீழே காண்போம்:-
கண்கவரும் வெளிப்புறத் தோற்றம்:
இரு திறன்பேசிகளும் மிகச் சிறந்த வடிவமைப்புகளை கொண்டிருந்தாலும், கேலக்ஸி நோட் 4 திறன்பேசிகளை விட ஐபோன் 6-ன் வெளிப்புற அமைப்பு வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் அமைந்துள்ளது.
அதன் வளைந்த முனைகளும், அலுமினிய பேனல்களும் கூடுதல் கவர்ச்சியை கொடுக்கின்றது. மேலும், ஆப்பிள் தனது முந்தைய திறன்பேசிகளைக் காட்டிலும் இந்த திறன்பேசிகளின் எடை மற்றும் குறுக்குத் திரை அளவுகளில் கூடுதல் கவனம் செலுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐபோன் 6, 5.5 அங்குல ‘எல்சிடி’ (LCD) திரை கொண்டதாகவும், கேலக்ஸி நோட் 4, 5.7 அங்குல ‘சூப்பர் அமொலெட்’ (Super AMOLED) திரை கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் ஆப்பிள் ‘முழு எச்டி’ (Full HD) தொழில் நுட்பம் கொண்டதாகவும், சாம்சுங் ‘க்யூஎச்டி’ (QHD) தொழில் நுட்பம் கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
இரண்டிற்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை என்றாலும், தொழில்நுட்பம் அறிந்த பயனர்களுக்கு இரண்டு திரைகளின் வித்தியாசங்களும் எளிதாகப் புலப்படும்.
கேமரா மற்றும் சிறந்த உருவாக்கக் கூறுகள்:
ஐபோன் 6, 8 மெகா பிக்செல் கேமராவையும், நோட் 4, 16 மெகா பிக்செல் கேமராவையும் கொண்டுள்ளன. எனினும், ஐபோன் 6-ல் கேமராக்களுக்கான தொழில் நுட்பம் சிறப்பாக இருப்பதால், புகைப்படங்களின் துல்லியம் நோட் 4-ஐ விட சிறந்ததாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.
சமீப காலமாக பயனர்கள் மத்தியில் அதிகரித்து வரும் செல்ஃபி புகைப்படங்களுக்காக சாம்சுங் 3.7 எம்பியிலும் ஐபோன் 6 1.2 எம்பியிலும் முன்புற கேமராவை கொண்டுள்ளன.
ஐபோன் 6-ல் ஏ8 உணர்த்திகள், திறன் வாய்ந்த நினைவகம், சிறந்த மின்கலன் என முந்தைய திறன்பேசிகளை விட சிறந்த தொழில்நுட்பங்களைக் கொண்டிருந்தாலும், சாம்சுங்கின் கை இங்கு ஓங்குகிறது.
நோட் 4 திறன்பேசிகள் 1.9GHz ‘ஆக்டா கோர்’ (Octa Core) செயலிகளைக் கொண்டிருப்பதால், இதன் வேகத்திற்கு ஐபோன் 6-ஆல் ஈடு கொடுக்க முடியவில்லை என பரவலாக பேசப்படுகின்றது.
ஐபோன் 6 ஆப்பிளின் ஐஒஎஸ் 8 இயங்குதளத்திலும், நோட் 4 அண்ட்ரோய்ட் 4.4 இயங்குதளத்திலும் இயங்கக் கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளன. பயனர்களுக்கான சிறந்த செயலிகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ள இரு நிறுவனங்களும் தங்கள் இயங்குதளத்தை மேம்படுத்தி உள்ளன.
எனினும் ஆப்பிளின் ஐஒஎஸ் 8 இயங்குதளைத்தில் ஆப்பிள் பே, ஆப்பிள் அல்லாத விசைப்பலகையின் பயன்பாடு, செயலிகளுக்கான மாற்றுப் பகிர்வு (Cross App Share) என பல்வேறு கூடுதல் சிறப்பு அம்சங்கள் கொண்டிருப்பது கூடுதல் சிறப்பாகும்.
.