பாக்தாத், செப்டம்பர் 12 – ஐஎஸ்ஐஎஸ் போராளிகளின் டுவிட்டர் கணக்குகளை முடக்கினால், டுவிட்டர் நிறுவன ஊழியர்கள் படுகொலை செய்யப்படுவார்கள் என ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.
சமீபத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடும் நோக்கில், இரு அமெரிக்க பத்திரிக்கையாளர்களின் தலைகளை கொய்து படுகொலை செய்தனர்.
மேலும், அதனை காணொளியாக பதிவு செய்து டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். மேலும் அவர்கள், அது போன்ற வன்முறையை தூண்டும் பல பதிவுகளை தொடர்ந்து பதிவு செய்து வந்தனர்.
இந்நிலையில் டுவிட்டர் நிறுவனம், அது போன்ற பதிவுகளை வெளியிடும் பயனர்களின் கணக்குகளை முடக்கி வருகின்றது. இதற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு கடும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பின் ஒரு குறிப்பிட்ட கணக்கிலிருந்து சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள மிரட்டல் பதிவில், “போராளிகளின் கணக்குகளை முடக்கினால் டுவிட்டர் ஊழியர்கள் படுகொலை செய்யப்படுவர்.உங்களின் மரணம் உங்களின் வாயிற் கதவு அருகே உள்ளது” என்றும் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து டுவிட்டர் நிறுவனம் அந்த கணக்கையும் உடனடியாக முடக்கியுள்ளது.