ஜெய்ப்பூர், ஏப்ரல் 6 – ஜெய்ப்பூரில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் துணை விமானி, தலைமை விமானியை காக்பிட்டில் வைத்து அடித்ததாகவும், தவறான வார்த்தைகளில் திட்டியதாகவும் பரபரப்புத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேற்கூறிய பரபரப்புச் சம்பவம் ஏர் இந்தியா 611 விமானத்தில் நிகழ்ந்துள்ளது. தலைமை விமானி, விமானம் புறப்படும் தருணத்தில் விமானத்தில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை, எரிபொருள் குறித்த தகவல்கள் போன்றவற்றை கணக்கிடும் படி துணை விமானிக்கு கட்டளையிட்டுள்ளார். அப்பொழுது துணை விமானி அதனை தவறாக கருதிக் கொண்டு விமானியை அடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் பற்றி ஏர் இந்தியா செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “இருவருக்கும் இடையே சிறிய வாக்குவாதமே நடைபெற்றது. அதனை அவர்கள் தீர்த்துக் கொண்டனர். ஊடகங்கள் அதனை பெரிதுபடுத்திவிட்டன” என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே சர்ச்சிக்குள்ளான துணை விமானி பற்றி பல்வேறு புதிய தகவல்களை மூத்த விமானிகள் கூறி வருகின்றனர். அதில் பெயர் வெளியிட விரும்பாத விமானி ஒருவர் கூறுகையில், “இதே துணை விமானி 3 வருடங்களுக்கு முன்பு, தலைமை விமானி ஒருவருடன் சண்டை போட்டுள்ளார். கடந்த வருடம் வேறொரு விமானியிடம் கடுமையாக நடந்து கொண்டுள்ளார்” என்று புகார் கூறியுள்ளார்.
மேலும் அவர், “துணை விமானியின் இந்த நடத்தையை ஏர் இந்தியா நிறுவனம் கண்டிக்க வேண்டும். AI611 விமானத்தில் நடந்தது என்ன என்று விசாரணை நடத்த வேண்டும். துணை விமானியின் மீது தவறு இருந்தால், அவரின் மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.