லக்னோ, மே 7 – யோகா குரு ராம்தேவ் சமீபத்தில் தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் பேசுகையில், ராகுல் காந்தியை விமர்சித்து பேசினார். தலித் மக்களின் வீடுகளுக்கு ராகுல் தேனிலவுக்கு சென்று வருவது போல பயணம் மேற்கொள்கிறார் என்றார் ராம்தேவ்.
ராம்தேவின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. தேர்தல் ஆணையத்திலும் புகார் தெரிவித்தது. அதன் பேரில் ராம்தேவ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதற்கிடையே நாடெங்கும் உள்ள தலித் அமைப்புகள் ராம்தேவுக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளன. இந்த நிலையில் ராம்தேவ் தலையை வெட்டி எடுத்து கொண்டு வந்தால் ரூ. ஒரு கோடி பரிசு தருவதாக பகுஜன் சமாஜ் தலைவர்களில் ஒருவரும், ஹோசிர்பூர் வேட்பாளருமான பகவான்சிங் சோகன் கூறியுள்ளார்.
ஹோசிக்பூரில் ராம்தேவ் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்திய போது அவர் இதனை தெரிவித்தார். இது பற்றி பிறகு அவர் நிருபர்களிடம் கூறுகையில், ஒட்டுமொத்த பெண் சமுதாயத்தை ராம்தேவ் அவமதித்து விட்டார். எனவே தான் அவர் தலைக்கு ரூ. ஒரு கோடி பரிசு அறிவித்துள்ளோம் என்றார்.
இதற்கிடையே ராம்தேவ் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர், என் மீதான வழக்குகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே வழக்காக நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.