ஒட்டாவா, மே 9 – புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் அதிகமாகக் குடியேறியுள்ள நாடான கனடா நாட்டின் நாடாளுமன்றத்தில் இலங்கை இறுதிகட்ட போர் நடந்த ‘மே 18’ நினைவு நாள் கடைப்பிடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர் வம்சாவளியினரின் முதல் நாடாளுமன்ற உறுப்பினராக ராதிகா சிற்சபேசன் கனடா நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கைத் தமிழர் விவகாரங்களை பல்வகைகளிலும் முன்னெடுத்துச் செல்லும் பணிகளில் கனடா நாட்டில் இயங்கி வரும் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் இயக்கங்கள் பல ஈடுபட்டு வருகின்றன.
இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே இறுதிகட்ட போர் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
ஐ.நா.சபை விசாரணைகளின்படி 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்தப் போரில் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிக் கட்ட போரில் வீரமரணம் அடைந்தவர்கள் மற்றும் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் மே 18 ஆம் தேதி நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் உள்ள நாடாளுமன்றத்தில் இந்த ஆண்டு மே 18 நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. அதற்கான ஏற்பாட்டை கனடா மனித உரிமை மையம் செய்துள்ளது.
18 ஆம் தேதி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்று நாடாளுமன்றம் மூடப்பட்டிருக்கும்.
எனவே இக்கூட்டம் வருகிற 14 ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடத்தப்படுகிறது. இதில் கனடா நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.
மேலும் இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்து கனடா வாழ் தமிழர்களுக்கும் மனித உரிமை மையம் அழைப்பு அனுப்பியுள்ளது. கனடாவில் உள்ள இதர தமிழ் அமைப்புகளும் பங்கேற்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.