லாகூர், மே 10 – பாகிஸ்தானில் இருந்து வங்கதேச தலைநகர் டாக்காவுக்கு, 100 பயணிகளுடன் சென்ற விமானம், இந்தியாவின் லக்னோவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பாகிஸ்தானின் லாகூர் நகரில் இருந்து செவ்வாய் கிழமை காலை 11 மணியளவில், வங்கதேச தலைநகர் டாக்காவுக்கு பயணிகள் விமானம் கிளம்பியது.
உத்தர பிரதேசத்தில் உள்ள இந்திய வான் எல்லையில் செவ்வாய்கிழமை மதியம் அந்த விமானம் பறந்து கொண்டிருந்தது.
அப்போது விமானத்தின் எரிபொருள் குறைந்துவிட்டதால், விமானத்தை உடனடியாக தரையிறக்க அனுமதிக்குமாறு லக்னோ விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தந்தார்.
இதையடுத்து, லக்னோவில் உள்ள சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்தில் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அந்த விமானத்தை பயணிகளுடன் பாதுகாப்பான இடத்தில் தரையிறக்கினர். பின்னர் விமானத்தில் எரிபொருள் நிரப்பப்பட்டு சில மணி நேரங்களில் பத்திரமாக திருப்பி அனுப்பப்பட்டது என்று லக்னோ விமான நிலைய இயக்குநர் எஸ்.சி.ஹோட்டா கூறியுள்ளார். இந்த தகவலை பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் நிறுவனமும் உறுதி செய்தது.