Home நாடு புக்கிட் குளுகோரில் கர்ப்பால் சிங் மகன் ராம் கர்ப்பால் ஜசெக வேட்பாளராக போட்டி

புக்கிட் குளுகோரில் கர்ப்பால் சிங் மகன் ராம் கர்ப்பால் ஜசெக வேட்பாளராக போட்டி

809
0
SHARE
Ad

PG03_100514_DAP_PRKஜார்ஜ் டவுன், மே 10 – பலரும் அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்த்தது போலவே, மறைந்த கர்ப்பால் சிங்கின் இளைய புதல்வரான ராம் கர்ப்பால் சிங் (வயது 38) புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஜசெக வேட்பாளராக நிறுத்தப்படுகிறார் என்று அக்கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் நேற்று அறிவித்தார்.

ஜசெக தேசியத் தலைவர் கர்ப்பால் சிங்கின் மூன்றாவது புதல்வரான இவர் மே 25 இல் நடைபெறும் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடுவார்.

ஜாலான் மஸ்ஜிட் நெகிரி, ஜார்ஜ் டவுனில் ஜசெக புக்கிட் குளுகோர் இடைத்தேர்தல் நடவடிக்கை மையத்தை திறந்து வைத்த பின் மாநில முதல்வரான லிம் இந்த அறிவிப்பை செய்தார்.

#TamilSchoolmychoice

மசீச கடும் போட்டியை வழங்குமா?

இந்த தொகுதியில் போட்டியிட தேசிய முன்னணி சார்பாக போட்டியிட மசீசவும் முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி வாய்ப்புகள் குறைவு என்றாலும், ஜசெகவுக்கு சுலபத்தில் வெற்றிக் கனியை தராமல் கடுமையான போட்டியை வழங்க மசீச முடிவு செய்துள்ளது.

கர்ப்பால் சிங்கின் குடும்பத்திலிருந்தே இதுவரை மூன்று சகோதரர்கள் பதவிகளை ஜசெகவில் ஆக்கிரமித்திருக்கும் அம்சம், மற்றும் ஹூடுட் சட்ட அமலாக்கத்தினால் பாஸ் மீது இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் கொண்டிருக்கும் ஏமாற்றம், இதனால் ஜசெகவின் தர்மசங்கடமான நிலைமை – இவற்றை முன் வைத்து மசீசவும் தேசிய முன்னணியும் புக்கிட் குளுகோரில் தீவிர பிரச்சாரங்களை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கர்ப்பாலின் சாதனை முறியடிக்கப்படுமா?

புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கர்ப்பால் சிங் கடந்த ஏப்ரல் 17 இல் நடந்த சாலை விபத்தில் அகால மரணமுற்றதை தொடர்ந்து இந்த இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் கர்ப்பால் சிங் இத்தொகுதியில் 42,706 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். இத்தொகுதியில் போட்டியிட்ட தேமு வேட்பாளர் தே பென் இயாம் 13,597 வாக்குகள் பெற்றார்.

கர்ப்பால் மீதுள்ள அனுதாபத்தினாலும், மாநில அரசாங்கத்தை நிர்வகிப்பது ஜசெக என்பதாலும் புக்கிட் குளுகோரில் ஜசெக வெல்வது மிக எளிது என்றாலும், இந்த இடைத் தேர்தலில் கர்ப்பாலின் சாதனை வாக்குகளை அவரது மகன் ராம் கர்ப்பால் முறியடிப்பாரா என்பதுதான் அனைவரும் எதிர்பார்க்கும் கேள்வி.