கோலா திரெங்கானு, மே 14 – முன்னாள் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அகமட் சைட்டைத் தொடர்ந்து அம்னோவில் இருந்து விலகியதாகக் கூறப்பட்ட இரு சட்டமன்ற உறுப்பினர்களும் இன்னும் அம்னோ கட்சியில் தான் உறுப்பினர்களாக உள்ளனர் என்று கூறப்படுகின்றது.
இது குறித்து புதிதாகப் பதவி ஏற்றுள்ள திரெங்கானு மந்திரி பெசார் டத்தோ அகமட் ராசிப் அப்துல் ரஹ்மான் (படம்) இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், “சபாநாயகர் இன்னும் அவர்களின் அதிகாரப்பூர்வ ராஜினாமா கடிதத்தைப் பெறவில்லை. இந்த பிரச்சனைகள் அனைத்தும் வெறும் வதந்திகள் தான்” என்று தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை கலைக்க பாஸ் வலியுறுத்துவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அகமட் ராசிப், இது அவர்கள் கட்சியின் வியூகங்களின் ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தைக் கலைப்பது குறித்து இன்று புத்ரா ஜெயாவில் நடைபெறவுள்ள பிரதமருடனான சந்திப்பில் கலந்தாலோசிக்கப் போவதில்லை என்றும் ராசிப் தெரிவித்துள்ளார்.
“இந்த நிலைமை விரைவில் சரிசெய்யப்படும். தேசிய முன்னணி தொடர்ந்து திரெங்கானுவில் ஆட்சி நடத்தும்”என்றும் ராசிப் தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை திரெங்கானு மந்திரி பெசார் அகமட் சைட் பதவி விலகியதைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக அகமட் ராசிப் பதவி ஏற்றார்.
அதனைத் தொடர்ந்து அஜில் சட்டமன்ற உறுப்பினர் கஸாலி தாயிப், புக்கிட் பீசி சட்டமன்ற உறுப்பினர் ரொஸ்லி டவுட் ஆகிய இருவரும் அம்னோவில் இருந்து விலகினர் என்பது குறிப்பிடத்தக்கது.