Home நாடு ரோஸ்லி தனது செயலுக்கு மன்னிப்பு! மீண்டும் அம்னோவில் இணைந்தார்!

ரோஸ்லி தனது செயலுக்கு மன்னிப்பு! மீண்டும் அம்னோவில் இணைந்தார்!

670
0
SHARE
Ad

rozliகோலா திரெங்கானு, மே 14 – அம்னோவில் இருந்து ராஜினாமா செய்து தன்னை சுயேட்சை வேட்பாளராக அறிவித்துக் கொண்ட புக்கிட் பெசி சட்டமன்ற உறுப்பினர் ரோஸ்லி டவுட், அடுத்த 12 மணி நேரத்திற்குள் மீண்டும் தன்னை அம்னோவில் இணைத்துக் கொண்டுள்ளார்.

இன்று மதியம் பிரதமர் நஜிப் துன் ரசாக்கை சந்தித்த பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ரோஸ்லி, திரெங்கானு மந்திரி பெசார் திடீரென மாற்றப்பட்ட அதிர்ச்சியால் தான் அம்னோவில் இருந்து விலகியதாக காரணம் கூறியுள்ளார்.

எனினும், தான் அது குறித்து அப்போது யோசித்ததாகவும், தற்போது மீண்டும் அம்னோவில் இணைந்து தேசிய முன்னணிக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

தான் யாருடைய வற்புறுத்தலின் பேரிலும் இந்த முடிவை எடுக்கவில்லை என்றும், இது தனது சொந்த முடிவு என்றும் ரோஸ்லி தெரிவித்துள்ளார்.

‘மன்னியுங்கள்’

தான் அவசரப்பட்டு எடுத்த முடிவு குறித்து தனது தொகுதி வாக்காளர்களிடமும், அம்னோ உறுப்பினர்களிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக ரோஸ்லி கூறியுள்ளார்.

“எனது அவசர முடிவுக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன். இப்போது அது முடிந்துவிட்டது. இனி தொடர்ந்து நாட்டிற்காகவும், இனத்திற்காகவும், மதத்திற்காகவும் போராடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அம்னோவில் இருந்து ராஜினாமா செய்துள்ள முன்னாள் மந்திரி பெசார் அகமட் சைட் மற்றும் கஸாலி தாயிப் ஆகிய இருவரும் நஜிப்புடனான சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை.

எனினும், திரெங்கானுவின் புதிய மந்திரி பெசாரான டத்தோ அகமட் ராசிப் அப்துல் ரஹ்மான், அகமட் சைட்டும், கஸாலியும் அம்னோவில் மீண்டும் இணைவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அகமட் சைட் இன்று மாலை 5 மணியளவில் கெமாமன் தொகுதியில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.