கெமாமன் தொகுதியில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அகமட் சைட், தனது மகள் திருமண விவகாரத்தில் பிரதமர் நஜிப்புக்கு ஏற்பட்ட தவறான புரிதலே இந்த பிரச்சனைக்குக் காரணம் என்றும் அகமட் சைட் கூறினார்.
“நஜிப் அவரது தவறுக்கு மன்னிப்பு கேட்டார். நானும் எனது செயலுக்கு மன்னிப்பு கேட்டேன்” என்று அகமட் சைட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தனது மகள் திருமணம் முடிந்ததும் மந்திரி பெசார் பதவியில் இருந்து ராஜினாமா செய்யுமாறு நஜிப் கூறியதாக சைட் குறிப்பிட்டார்.
“திருமணம் மே 10 ஆம் தேதியோடு நிறைவடைந்துவிட்டதாக நஜிப் எண்ணிக் கொண்டுவிட்டார். ஆனால் 17 ஆம் தேதி ஒரு வரவேற்பு உள்ளது. 31 ஆம் தேதி கோலாலம்பூரில் வரவேற்பு நிகழ்ச்சி உள்ளது.” என்றும் சைட் கூறினார்.
தனது மகள் திருமணம் தனக்கு மிகவும் கௌரவமான ஒன்று என்றும், தனது கோரிக்கையை நஜிப் ஏற்க மறுத்து விட்டதால் அம்னோவில் இருந்து விலகியதாகவும் சைட் தெரிவித்தார்.
தற்போது தாங்கள் இருவரும் தங்களது செயலுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டதால் தனது ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெற்றுக் கொண்டதாகவும், அஜிலி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கஸாலி தாயிப்பும் அவ்வாறே செய்வார் என்றும் சைட் தெரிவித்தார்.
எனினும் கஸாலி இந்த செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.