Home India Elections 2014 தேர்தல் முடிவுகள் பார்வை # 3 : தெலுங்கானா உதயமும் சந்திரசேகர் ராவ் எழுச்சியும்!

தேர்தல் முடிவுகள் பார்வை # 3 : தெலுங்கானா உதயமும் சந்திரசேகர் ராவ் எழுச்சியும்!

762
0
SHARE
Ad

K Chandrasekhar Rao _0_2_0_1_0_0ஹைதராபாத், மே 22 – அரசியலில் மட்டும் யார், எப்போது, எப்படி உச்சத்துக்கு வருவார்கள் என்பதை அறுதியிட்டு கூறமுடியாது.

நடக்காது என்பார் நடந்து விடும் என்பது போல ஒரு மாயம் போல ஒரு நிகழ்வு நடந்து ஒருவரை உச்சத்துக்கு கொண்டு சென்று விடும்.

நடந்து முடிந்த இந்தியப் பொதுத் தேர்தல்களின் முடிவுகளை வைத்துப் பார்க்கும்போது அவ்வாறு உச்சத்தைத் தொட்டு, இந்திய அரசியலில் ஒரு முக்கிய புள்ளியாக உருவெடுத்திருப்பவர் கே.சந்திரசேகர் ராவ்.

#TamilSchoolmychoice

தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி (டிஆர்எஸ்)  கட்சியின் தலைவர். புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தில், பொதுத் தேர்தலோடு சேர்த்து மாநில சட்டமன்றத் தேர்தல்களும் நடத்தப்பட, அங்கே பெரும்பான்மையான சட்டமன்றங்களை வென்றிருப்பதன் மூலம் அந்த மாநிலத்தின் முதல் முதல்வராக எதிர்வரும் ஜூன் 2ஆம் தேதி பதவியேற்கப் போகின்றவர்.

யார் இந்த சந்திரசேகர் ராவ்?

kcr-partner-647x450ஒல்லியான, குள்ளமான தேகம்; கவர்ச்சியற்ற முகம்; புடைத்து நிற்கும் மூக்கு; இப்படியாக அரசியலுக்கு தேவையான ஈர்ப்புகள் எதுவும் இல்லாத சந்திரசேகர் மக்கள் மனதோடு ஒன்றிய விவகாரத்தை கையிலெடுத்து போராடிய காரணத்தால், மக்களின் தலைவரானார்.

கேசிஆர் என்ற சுருக்கப் பெயரிட்டு தொண்டர்களால் அழைக்கப்படுகின்றார்.

ஹைதராபாத் உஸ்மேனியா பல்கலைக் கழகத்தில் தெலுங்கு இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர்.

தீவிர அரசியலுக்கு வருவதற்கு முன்னர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்கு ஆள் அனுப்பும் தொழிலில் ஈடுபட்டு, அதனால் ‘துபாய் சேகர்’ என்ற புனை பெயரோடு உலா வந்தவர் இவர் என்றும் ஒரு தகவல் கூறுகின்றது.

முதலில் காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக ஈடுபட்டவர் பின்னர் தெலுகு தேசம் கட்சி அமைக்கப்பட்டதும் அதில் சேர்ந்து சட்டமன்ற உறுப்பினரானார்.

பல தவணைகள் வென்று ஆந்திரா சட்டமன்றத்தின் துணை சபாநாயகராகவும் ஆனார்.

சந்திரபாபு நாயுடுவின் அரசாங்கத்தில் முக்கிய தலைவராகவும் உருவெடுத்து வந்தார் ராவ்.

2011ஆம் ஆண்டில் தனது தெலுங்கானா பகுதி மக்கள் பாரபட்சமாக நடத்தப்படுகின்றார்கள் என்று முழங்கி, தனி தெலுங்கானா போராட்டத்தைக் கையிலெடுத்தார்.

அதற்காக தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி என்ற கட்சியையும் தொடங்கினார்.

தெலுங்கானா போராட்டம்

chandrasekhar rao (1)

(உண்ணாவிரதப் போராட்டத்தில் சந்திரசேகர் ராவ்) 

அடுத்த சில ஆண்டுகளில் ஆந்திராவில் தெலுங்கானா தனி மாநிலப் போராட்டம் மெல்ல மெல்ல உருவெடுத்து பெரும் மக்கள் போராட்டமாக வெடித்தது.

பல முறை சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி உடல் நலிந்து அதன் மூலம் தெலுங்கானா மக்களின் இதயங்கவர்ந்த தலைவராக உருவாகினார் ராவ்.

இந்த ஆண்டு பொதுத் தேர்தலை எதிர்நோக்கிய காங்கிரஸ் கட்சி அதிரடி வியூகமாக, புதிய தெலுங்கானா மாநில உருவாக்கத்திற்கு அனுமதி தந்தது.

அதன்மூலம், தெலுங்கானா மக்களின் ஆதரவைப் பெற்று சில தொகுதிகளை வெல்லலாம் – சந்திரசேகரின் கூட்டணி ஆதரவையும் பெற்றுக் கொள்ளலாம் என்று கணக்குப் போட்டது.

தெலுங்கானா தேர்தல் முடிவுகள் 

ஆனால், ராவ் காங்கிரஸ் கட்சியை முட்டாளாக்கினார்.

தனி மாநிலம் கிடைக்கும் வரை காங்கிரசோடு உறவாடியவர், தனி மாநிலம் கிடைத்ததும், காங்கிரஸ் கட்சி மிகவும் பலவீனமாக இருப்பதைக் கணித்து, தனியாகவே தெலுங்கானா மாநிலத்தில் தனது கட்சியை தேர்தல் களத்தில் இறக்கினார்.

எதிர்பார்த்தபடியே, தங்களுக்காக தனி மாநிலத்தை உருவாக்கித் தந்த தலைவர் என்ற முறையில் தெலுங்கானா மக்கள் வாரியணைத்து அவருக்கு வெற்றி மாலை சூட, மொத்தமுள்ள 119 சட்டமன்றத் தொகுதிகளில் 63 இடங்களை ராவ்வின் கட்சி வெற்றி கொண்டது.

காங்கிரஸ் 21 இடங்களை மட்டுமே வென்று எதிர்க்கட்சியாகியுள்ளது.

2014 பொதுத் தேர்தல் வெற்றிக்கு காரணம் பாஜக வகுத்த உத்தரசப் பிரதேச வெற்றிதான் காரணம் என்று சொல்லப்படும் அதே வேளையில், காங்கிரசின் தோல்விக்கு ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் அவர்கள் கையாண்ட அரசியல் தான் காரணம் என்பது மற்றொரு அரசியல் கணிப்பு. அது உண்மையும் கூட.

யாரும் எதிர்பார்க்காத, தெலுங்கானா மாநிலப் போராட்டத்தைக் கையிலெடுத்து விடாப்பிடியாக நம்பிக்கையோடு போராடி வெற்றி பெற்ற சந்திரசேகர ராவ் தெலுங்கானா மாநிலத்தின் சக்தி மிக்க முதல்வராகியுள்ளார்.

அதே வேளையில் இந்த பொதுத் தேர்தலின் வழி தன் குடும்பத்தினர் பலரையும் உறவினர்களையும் சட்டமன்ற உறுப்பினர்களாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் உருவாக்கி, கட்சியையும் தன் அரசியல் நிலையையும் மாநிலத்தில் வலுவாக்கிக் கொண்டுள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தின் 17 நாடாளுமன்றத் தொகுதிகளில் 11 தொகுதிகளையும் தெலுங்கானா கட்சி வெற்றி கொண்டுள்ளது.

காங்கிரஸ் இரண்டு தொகுதிகளை மட்டுமே வென்றுள்ளது. பாஜக ஒரு தொகுதியை வென்றுள்ளது.

இதன் மூலம் தெலுங்கானாவில் தனிப் பெரும் சக்தியாக சந்திரசேகர் ராவ் உருவெடுத்துள்ளார்.

தெலுகு தேசம், ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்எஸ்ஆர் போன்ற கட்சிகள் தனி தெலுங்கானா மாநில பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் அவர்களால் இனியும் தெலுங்கானா மாநிலத்தில் அரசியல் ரீதியாக தலையெடுக்க முடியுமா என்பது சந்தேகமே!

தெலுங்கானாவின் சரித்திர மனிதராக – இந்த பொதுத் தேர்தலின் வழி, இந்திய அரசியலில் ஒரு புதிய முகமாக – உருவெடுத்துள்ள சந்திரசேகர ராவ் தலைமையும் ஆட்சியும் எப்படி இருக்கும் என்பதை அடுத்த 5 ஆண்டுகள் நிரூபிக்கும்.

-இரா.முத்தரசன்