Home கலை உலகம் திரைவிமர்சனம்: கோச்சடையான் – ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்பான்!

திரைவிமர்சனம்: கோச்சடையான் – ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்பான்!

681
0
SHARE
Ad

kochadaiyaanகோலாலம்பூர், மே 23 – கோட்டையப் பட்டினம், கலிங்கபுரி இரண்டு நாடுகளுக்கிடையில் காலங்காலமாக இருந்து வரும் பகை, அதன் காரணமாக கோட்டையப்பட்டினம் படைத்தளபதி கோச்சடையானுக்கு இழைக்கப்படும் நயவஞ்சகம், அந்த வஞ்சகத்தை சாதகமாக்கிக் கொள்ளும் சொந்த நாட்டு மன்னனின் பொறாமை, கோச்சடையானின் மரணத்திற்கு அவரது வாரிசான ராணாவின் பழிவாங்கல் என்ற சரித்திர கதையை கருவாகக் கொண்டு, மோஷன் கேப்ட்சரிங் (நடிப்புப் பதிவாக்கம்) தொழில்நுட்பத்தில் புதிய பரிமாணத்தில் மிக அற்புதமாக சொல்லியிருக்கும் படம் ‘கோச்சடையான்’.

சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், கே.எஸ்.ரவிக்குமார் திரைக்கதையில், உருவாகி இருக்கும் இத்திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே, ‘பொம்மைப்படம்’ என்று பலராலும் வர்ணிக்கப்பட்டாலும் கூட, ரஜினியின் முந்தைய படங்களுக்கு ஈடாக அதே பஞ்ச் வசனங்களுடன் ரஜினியை சூப்பர் ஸ்டாராகவே காட்டியிருப்பது ரஜினி ரசிகர்களுக்கு ஒரு இன்ப விருந்து என்று தான் சொல்லவேண்டும்.

படம் தொடங்கிய சில நிமிடங்களுக்கு ‘பொம்மைப்படம்’ போல் தோன்றினாலும், படுவேகமான திருப்பங்களுடன் கூடிய திரைக்கதையில், இசைப்புயலின் பின்னணி இசை புகுந்தவுடன் படத்தோடு ரசிகர்கள் ஒன்றிவிட வைத்ததில் இயக்குநர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் திறமை வெளிப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

இன்றைய காலத்தில், விமர்சனத்தைப் படித்த பிறகே படம் பார்க்க செல்லும் அளவிற்கு மக்களின் ரசனை மாறிவிட்டதால், தியேட்டருக்கு சென்று ‘கோச்சடையான்’ படம் பார்க்கலாமா? என்ற உங்களின் கேள்விக்கு ‘பார்க்கத் தவறாதீர்கள்’ என்பதே எமது பதில். படத்தை 3டி தொழில்நுட்பத்தில் பார்த்தால் இன்னும் கூடுதல் சிறப்பாக இருக்கும்.

தொழில்நுட்பம்

ரஜினியையும், நாசரையும் தவிர மற்ற நடிகர்களின் உருவங்களை அவர்களின் குரலை வைத்தே கண்டுபிடிக்க வேண்டிய நிலையில் இருந்தாலும், அந்த கதாப்பாத்திரங்களின் தன்மையால், நிஜ நடிகர்களை நாம் மறந்தேவிடுகிறோம்.

சரத்குமார், தீபிகா படுக்கோன், ரஜினியின் தங்கையாக நடித்திருக்கும் ருக்மணி, சோபனா,  நடிகர் ஆதி ஆகியோரின் முகங்களை இரண்டு மூன்று முறை உற்று பார்த்த பிறகு தான் அடையாளம் காண முடிகிறது.

குறிப்பாக ருக்மணி நிஜத்தில் உள்ளதை விட அனிமேஷனில் எலும்பும் தோலுமாக பல நாட்கள் பட்டினி கிடந்தவர் போல் பாவமாக இருக்கிறார்.

மறைந்த நடிகர் நாகேஷை அச்சு அசலாக உருவாக்கி அவரை மீண்டும் நடிக்க வைத்திருப்பதில் அனிமேஷன் தொழில்நுட்பத்தின் வருகை ஆறுதல் அளிக்கிறது.

கதை, திரைக்கதை,வசனம்kochadaiyaan

கலிங்கபுரியின் தலைமைத் தளபதியாக ராணா(ரஜினி) உருவெடுப்பது தொடங்கி, அவர் தனது சமயோஜித புத்தியால் எடுக்கும் அதிரடி முடிவுகள் என ரஜினியின் பாணியில் விறுவிறுவென நகர்கிறது திரைக்கதை.

கோட்டையப்பட்டினத்து மன்னனாக நாசர் கதாப்பாத்திரத்தை கொல்ல வருவது யார்? என்ற முடிச்சு அவிழும் போது பிளாஷ்பேக் காட்சிகளில் தொடங்குகிறது ‘கோச்சடையானின்’ வரவு.

சிறிது நேரம் வந்தாலும் கோச்சடையான் தன் உயர்ந்த பண்புகளாலும், நாட்டின் மீது கொண்ட பக்தியாலும் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறார். சில காட்சிகளில் ‘முத்து’ படத்தின் நினைவுகள் வந்து போவதை தவிர்க்க முடியவில்லை.

“வாய்ப்பு என்பது தானாக அமையாது… நாம் தான் அமைத்துக் கொள்ள வேண்டும்”, “எல்லோரும் ஒரு நாள் போக வேண்டியவர்கள் தான்” “வேஷம் போட வந்தவன் கலை இருக்கும் வரை வேஷம் போட்டு தான் ஆக வேண்டும்” போன்ற நச் வசனங்கள் அனைத்தும் படம் பார்ப்பவர்களுக்கு எனர்ஜி டானிக்.

எதிர்பார்க்காத விதத்தில் தீபிகாவின் சண்டைக் காட்சி அந்த காலத்தில் இளவரசிகளின் வீரத்தையும், தைரியத்தையும் கண்முன் கொண்டு வருகின்றது.

Kochadaiyaanஇசைப்புயலின் பிரம்மாண்டமான இசை

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பிரம்மாண்டமான இசை ஒவ்வொரு காட்சிக்கும் உயிர் கொடுக்கிறது என்பதோடு வைரமுத்து, வாலியின் வரிகளில் ஒவ்வொரு பாடலும் மனதை வருடுகிறது.

‘கர்மவீரன்’, ‘மாற்றம் ஒன்று தான் மாறாதது’, ‘சத்தியம்’, ‘ஆகாயம்’ போன்ற பாடல்கள் அற்புதம்.

குறிப்பாக மாற்றம் ஒன்றே மாறாதது பாடலில் வரும் “தண்ணீரைக் கூட சல்லடையில் அள்ளிவிடலாம் அது பனிக்கட்டியாகும் வரை காத்திருந்தால்”, “சூரியனுக்கு முன் எழு.. அந்த சூரியனையும் வெற்றிடலாம்”, “பணத்தால் சந்தோஷத்தை வாடகைக்கு வாங்கலாம் விலைக்கு வாங்க முடியாது”, “பகைவனின் பகையை விட நண்பனின் பகையெ ஆபத்தானது” போன்ற வரிகள் முத்தான தத்துவங்கள்.

படத்தில் மொத்தம் மூன்று ரஜினி, கோச்சடையானாக தந்தை ரஜினி, அவருக்கு சேனா, ராணா என இரண்டு வாரிசுகள் (இரண்டும் ரஜினி தான்).

தந்தை கோச்சடையானின் சத்தியத்தை காப்பாற்றுவேன் என்று உறுதியளித்த மூத்த மகனான சேனா படத்தின் இறுதிக் காட்சியில் மட்டுமே வருகிறார். அவர் அதுவரை எங்கு இருந்தார்? எதற்காக கடைசியில் வருகிறார்? தந்தையின் சத்தியத்தை நிறைவேற்ற என்ன செய்தார்? போன்ற கேள்விகளுக்கு விடை தெரியும் முன்னரே ‘தொடரும்’ என்று கூறி படம் முடிகிறது.

ஒருவேளை கோச்சடையானின் இரண்டாவது பாகத்திற்காக ரசிகர்களின் மனதில் விதைத்த எதிர்பார்ப்பாக இருக்கலாம்.

மொத்தத்தில் ‘கோச்சடையான்’ – ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்பான்…

– ஃபீனிக்ஸ்தாசன்

கோச்சடையான் முன்னோட்டம்: