கோலாலம்பூர், மே 24 – நாளை நடைபெறவிருக்கும் மலேசிய காற்பந்து சங்கத்தின் பொறுப்பாளர்கள் தேர்தல் ஒரு புதுமையான போராட்டத்தைச் சந்திக்கவுள்ளது.
கடந்த 30 வருடங்களாக மலேசிய காற்பந்து சங்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து வரும் 83 வயது பகாங் சுல்தான் பதவி விலகுவதை முன்னிட்டு காலியாகும் தலைவர் பதவிக்கு இரண்டு இளவரசர்கள் போட்டியில் குதித்துள்ளனர்.
பகாங் சுல்தானின் மகனும் பகாங் மாநில இளவரசருமான துங்கு அப்துல்லா தலைவர் பதவிக்கு நிற்பதாக அறிவித்துள்ளார். தற்போது அவர் சங்கத்தின் துணைத் தலைவராக இருக்கிறார்.
ஜோகூர் சுல்தானின் புதல்வரான துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிமும் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இவர் ஜோகூர் மாநிலத்தின் இளவரசர் ஆவார்.
இந்த இரண்டு அரச குடும்பங்களின் வாரிசுகளும் காற்பந்து சங்கத் தலைவர் பதவிக்கு நேருக்கு நேராக மோதிக் கொள்வது மலேசிய விளையாட்டு அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விளையாட்டு அமைப்புகளில் அரச குடும்பங்களின் ஈடுபாடு
பகாங் இளவரசர் துங்கு அப்துல்லா
காற்பந்து சங்கம் போன்ற விளையாட்டு அமைப்புகளில் அரச பரம்பரையினரும் சுல்தான்களும் நேரடியாக ஈடுபட்டு தலைமை பொறுப்பில் இருந்து வருவது பல காலமாக குறைகூறல்களுக்கு ஆளாகி வந்துள்ளது.
இதனால் விளையாட்டு சங்கங்களின் நிர்வாகக் கூட்டங்களில் அச்சம் காரணமாக பல விவகாரங்கள் துணிந்து விவாதிக்கப்படுவதில்லை என்ற குறைபாடு இருக்கின்றது.
இந்நிலையில், காலியாகும் தலைவர் பதவிக்கு போட்டியிடும் இருவருமே அரச குடும்பத்து இளவரசர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பகாங் இளவரசர் துங்கு அப்துல்லா பல்லாண்டுகளாக துணைத் தலைவராக பதவி வகித்து அதன்வழி வந்த தனது அனுபவத்தை முன் வைத்து போட்டியிடுகின்றார்.
ஜோகூர் இளவரசர் துங்கு இஸ்மாயில்
அதேவேளையில் ஜோகூர் இளவரசர் துங்கு இஸ்மாயிலோ காற்பந்து விளையாட்டுத் துறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக போட்டியிடுகின்றார்.
மலேசிய காற்பந்து சங்கத்தின் இணை சங்கங்களுக்கு 2 மில்லியன் முதல் 3 மில்லியன் வரை நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படுவதை தான் உறுதி செய்வேன் என்றும் துங்கு இஸ்மாயில் கூறியுள்ளார்.
காற்பந்து சங்கத்தின் தேர்தல்கள் நாளை நடைபெறவிருக்கின்றன.