பெய்ஜிங், மே 26 – சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் தீவிரவாதிகள் வியாழக்கிழமை நிகழ்த்திய தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், அந்த மாகாணத்தில் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கான ஓராண்டு கால நடவடிக்கையை சீன அரசு வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக சீனாவில் பிரிவினைவாதிகள் தீவிரவாதத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். தங்கள் நாட்டுக்கு வெளியே உள்ள தீவிரவாதிகளின் ஊக்குவிப்புடன் இத்தாக்குதலை அவர்கள் நடத்தி வருவதாக சீன அரசு தெரிவித்துள்ளது. இதனால, தற்போது பெய்ஜிங் உள்ளிட்ட நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, குண்டு வெடித்த பகுதிக்குச் சென்று தடயங்களை ஆராய்ந்த சீனாவின் பொதுமக்கள் பாதுகாப்புத்துறை அமைச்சர் குவோ ஷெங்கன், உய்குர் தன்னாட்சிப் பிராந்திய பொதுத்துறையுடன் கலந்தாலோசித்ததோடு, தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
“தீவிரவாதத்துக்கு எதிராக கடுமையான கண்காணிப்பில் ஈடுபடுவதற்கும், அதை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இந்தத் தாக்குதல் ஓர் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளப்படும். சமூக ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கும் வகையிலான முயற்சிகளை வட்டார நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.