புதுடில்லி, மே 26 – வரலாறு காணாத தோல்விகளைச் சந்தித்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஒருவர், கடந்த பொதுத் தேர்தலைவிட ஒரு இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று இந்த முறையும் வென்றிருக்கின்றார் என்றால் நம்ப முடிகின்றதா?
அவர்தான் கமல்நாத்!
கவிழ்ந்து போன காங்கிரஸ் கட்சியின் ஆட்சி காலத்தில் நகர் மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பதவி வகித்தவர்.
மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள சிண்ட்வாரா என்ற நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட கமல்நாத், கடந்த 2009 பொதுத் தேர்தலில் 409,736 வாக்குகள் பெற்று அபார வெற்றியடைந்தார்.
இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு நாடு தழுவிய அளவில் எல்லாத் தொகுதிகளிலும் மரண அடி விழுந்து கொண்டிருந்த நேரத்திலும், முன்பை விட அதிகமாக, 559, 755 வாக்குகள் பெற்று – ஒரு இலட்சத்துக்கும் கூடுதலான வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் வெற்றி பெற்றிருக்கின்றார் கமல்நாத்.
இது ஒன்றே போதும், அவரது அரசியல் அனுபவத்திற்கும், திறமைகளுக்கும் சாட்சி சொல்ல!
ஆங்கிலத்தில் புலமை வாய்ந்தவர்
தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் ப.சிதம்பரம் போன்ற முக்கிய தலைகளெல்லாம் காணாமல் போக, தொடர்ந்து தொலைக்காட்சிகளில் தோன்றி, காங்கிரசின் நிலைப்பாட்டையும், அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் என்ன என்பது பற்றியும் தெளிவான ஆங்கில உச்சரிப்போடு விளக்கம் தந்து கொண்டிருப்பவர் கமல்நாத்.
மற்றொருவர் கேரளாவின் சசி தரூர்.
நியாயப்படி கமல்நாத் எதிர்க்கட்சி தலைவராகியிருக்க வேண்டும்
நியாயப்படி பார்த்தால் காங்கிரசின் எதிர்க்கட்சி நாடாளுமன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டியவர் கமல்நாத். அந்த அளவுக்கு நாடாளுமன்ற அனுபவம் வாய்ந்தவர்.
இந்த தவணையோடு சேர்ந்தால் இதுவரை 8 தடவைகள் அதே சிண்ட்வாரா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சாதனை படைத்திருப்பவர் கமல்நாத்.
அது மட்டுமல்லாமல், மத்திய அரசாங்கத்தில் பல்வேறு அமைச்சுப் பொறுப்புகளை வகித்து திறம்பட செயலாற்றியவர் அவர்.
68 வயதானாலும், இன்னும் இளமையும் துடிப்பும் குன்றாமல் அரசியல் வானில் வலம் வந்து கொண்டிருப்பவர் கமல்நாத்.
ஆனால், வழக்கம்போல் காங்கிரசின் உள்குத்து அரசியல், குடும்ப அரசியல் ஆகிய காரணங்களால் சோனியா காந்தியே மீண்டும் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தலைவராக நியமிக்கப்பட்டிருக்கின்றார் – அதாவது தன்னைத் தானே நியமித்துக் கொண்டிருக்கின்றார்.
இருப்பினும் அடுத்து வரும் ஆண்டுகளில் காங்கிரசின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக – பாஜகவின் நடவடிக்கைகளுக்கு எதிரணியில் இருந்து குரல் கொடுக்கக்கூடிய திறன் வாய்ந்தவராக –
கமல்நாத் உருவெடுப்பார் – அதன் மூலம் காங்கிரசுக்கும் கொஞ்சம் உயிர் கொடுப்பார் என்பது அரசியல் பார்வையாளர்களின் கணிப்பு.
-இரா.முத்தரசன்