Home இந்தியா நரேந்திர மோடி பதவியேற்பு விழா: தே.மு.தி.க., பா.ம.க. தலைவர்கள் பங்கேற்பு – வைகோ புறக்கணிப்பு!

நரேந்திர மோடி பதவியேற்பு விழா: தே.மு.தி.க., பா.ம.க. தலைவர்கள் பங்கேற்பு – வைகோ புறக்கணிப்பு!

635
0
SHARE
Ad

vijayakanth-ramadossசென்னை, மே 26 – நரேந்திரமோடி பதவியேற்பு விழாவில், தமிழகத்தில் இருந்து தே.மு.தி.க., பா.ம.க. தலைவர்கள் பங்கேற்கிறார்கள். ஆனால், இலங்கை அதிபர் ராஜபக்சேவின் வருகையை காரணம் காட்டி ம.தி.மு.க. புறக்கணித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நரேந்திரமோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று (திங்கள்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெறும் விழாவில் அவர் பிரதமராக பதவியேற்க உள்ளார். அவருடன் பா.ஜனதா கட்சி மூத்த தலைவர்களும் மந்திரிகளாக பதவியேற்கின்றனர்.

விழாவில், பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்ற அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா கூட்டணியில், தமிழகத்தில் இருந்து தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி ஆகியவை இடம் பெற்றிருந்தன.

#TamilSchoolmychoice

பா.ஜனதா கட்சி தலைவர்கள் அழைப்பை ஏற்று கூட்டணி கட்சி தலைவர்கள், நரேந்திரமோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள டெல்லி செல்கின்றனர். தே.மு.தி.க. சார்பில், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் இன்று காலை டெல்லி புறப்பட்டு செல்கின்றனர்.

vaikoபா.ம.க. சார்பில், இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர். முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, புதுச்சேரி மாநில செயலாளர் அனந்தராமன் ஆகியோர் டெல்லி செல்ல உள்ளனர்.

இதேபோல், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், புதியநீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் டி.ஆர்.பாரிவேந்தர் ஆகியோரும் டெல்லி செல்ல இருக்கின்றனர். இலங்கை அதிபர் ராஜபக்சே, நரேந்திரமோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதால், ம.தி.மு.க. புறக்கணித்துள்ளது.

அதேநேரத்தில், டெல்லியில் இருக்கும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, முன்னாள் எம்.பி. கணேசமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் ராஜபக்சேவுக்கு எதிராக இன்று கருப்பு கொடி போராட்டம் நடத்த உள்ளனர்.

தமிழக பா.ஜனதா கட்சி சார்பில், மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், தேசிய செயலாளர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், மாநில நிர்வாகிகள் சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, வானதி சீனிவாசன், லலிதா குமாரமங்கலம் உள்பட 30 பேர் பங்கேற்கின்றனர்.

நரேந்திரமோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள, நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் ஆகியோருக்கு பா.ஜனதா கட்சி தலைமை அழைப்பு விடுத்துள்ளது. எனவே, அவர்கள் 2 பேரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.