கோலாலம்பூர், மே 26 – காணாமல் போன எம்எச் 370 விமானத்தின் பயணிகளின் ஆதரவு குழு ஒன்று அந்த விமானம் மலேசியாவின் ஆகாயப் பாதையை விட்டு வெளியேறவே இல்லை என விமானி ஒருவரின் கருத்து குறித்து விளக்கம் கூறுமாறு மலேசிய அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டது.
பெயர் குறிப்பிட விரும்பாத விமானி ஒருவர், அவருக்கு தெரிந்த தகவல்களின் படி, எம்எச் 370 விமானம் மலேசிய ஆகாயப் பாதையை விட்டு விலகிச் செல்லவே இல்லை என்று கூறியிருக்கிறார்.
அவரது கருத்துக்கு காரணமென்ன? எந்தத் தகவலின் அடிப்படையில் இந்த விவரத்தை அவர் தெரிவித்து இருக்கிறார்? என்பது போன்ற கேள்விகளுக்கு மலேசிய அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என்று அந்தக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.
எம்எச் 370 விமானத்தில் காணாமல் போன 239 பயணிகளின் ஒருவரான அமெரிக்க பிலிப்வூட்ஸ் என்பவருக்கு ஆதரவாக இந்தக் குழு செயல்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மலேசிய அரசாங்கம் வெளியிட்ட முதல் கட்ட அறிக்கையின் அடிப்படையில் அதனை ஆய்வு செய்து தங்களின் கண்டுபிடிப்புகளையும் கேள்விகளையும் மலேசிய அரசாங்கத்திற்கும், ஆஸ்திரேலியா அரசாங்கத்திற்கும் மற்றும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள மற்ற அமைப்புகளுக்கும் இந்தக் குழு அனுப்பியுள்ளது.
துணைக்கோள படங்களின் அசல் பிரதிகளை மலேசிய அரசாங்கம் வெளியிட வேண்டும் என்றும், இந்தக் குழு ஏற்கெனவே கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து துணைக்கோளப் படங்களை இம்மார்சாட் (Immarsat) நிறுவனம் எடுத்த அசல் புகைப்படங்களை பகிரங்கமாக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கும்படி மலேசிய பொதுப் போக்குவரத்து துறை இலாகாவிற்கு இடைக்கால போக்குவரத்து அமைச்சர் ஹிசாமுடின் துன் ஹுஷேன் ஓன் உத்தரவிட்டிருக்கின்றார்.
இதே குழு வேறு சில கேள்விகளையும் எழுப்பியுள்ளது. ஆஸ்திரேலியா அரசாங்கம் தனது பிரதேசத்திலிருந்து 3,000 கிலோமீட்டர் வரை கடல் மற்றும் ஆகாய மார்க்க நடவடிக்கைகளை கண்காணிக்கும் ஆற்றல் பெற்றிருக்கிறது. இந்நிலையில், காணாமல் போவதற்கு முன்னதாக எம்எச் 370 விமானத்தை ஏன் ஆஸ்திரேலியா அரசாங்கத்தால் அடையாளம் காணமுடியவில்லை என்பதும் அதில் ஒரு கேள்வியாகும்.
மேலும் சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளின் ராடார் கருவிகள் கண்டறிந்த விவரங்கள் குறித்து இதுவரை ஏன் விளக்கம் தரப்படவில்லை என்றும் அந்தக் குழு கேட்டுள்ளது.
மேலும் ஒரு விமானத்தை தரையிலிருந்தே தானியங்கி சாதனங்கள் மூலம் இயக்க முடியும் என்றும், இது குறித்து போயிங் நிறுவனம் ஏன் விளக்கம் தரவில்லை என்றும் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் ஏற்கெனவே கேள்வியெழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.