புதுடில்லி, மே 26 – நரேந்திர மோடி இந்தியாவின் 15வது பிரதமராகப் பதவியேற்றுக் கொண்ட நிகழ்வு இன்று கோலாகலமாக நடந்தேறியது.
பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் அருகில் அமர்ந்திருந்த நரேந்திர மோடிக்கு வந்திருந்த அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.
மன்மோகன் – சோனியா – ராகுல் பங்கேற்பு
ஏறத்தாழ 3,000 விருந்தினர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வுக்கு வருகை தந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அருகில் அமர்த்தி வைக்கப்பட்டார்.
காங்கிரஸ் சார்பில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரமும் கலந்து கொண்டார்.
சார்க் நாடுகளின் தலைவர்கள்
சார்க் நாடுகளின் கூட்டமைப்பின் தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்ள, வங்காளதேசத்தின் தலைவர் மட்டும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.
பதவியேற்பு வைபவம் முடிந்ததும் சார்க் தலைவர்கள் அனைவரும் வரிசையாக வந்து மோடியிடம் கைகுலுக்கி வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
இலங்கை அதிபர் ராஜபக்சேவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். ஆனால், அவரது வருகையால் ஒட்டு மொத்த தமிழ் நாடே இந்த வைபவத்தை புறக்கணித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மோடியின் தாயார் வீட்டிலிருந்து தொலைக்காட்சியில் பார்த்தார்
நரேந்திர மோடியின் தாயார் தனது குடும்பத்தினருடன் தனது இல்லத்து தொலைக்காட்சியின் முன்னால் அமர்ந்து மோடியின் பதவிப் பிரமாண வைபவத்தைப் பார்த்துக் கொண்டிருந்தது நெகிழ்வான தருணமாக இருந்தது.
அப்துல் கலாமும் கலந்து கொண்டார்
முன்னாள் அதிபர் அப்துல் கலாமும் மோடியின் பதவிப் பிரமாண வைபவத்தில் கலந்து கொண்டார்.
இதற்கு முன்னர் பாஜக, வாஜ்பாய் தலைமையின் கீழ் ஆட்சி அமைத்திருந்தபோதுதான் அப்துல் கலாம் அதிபராக பாஜகவால் முன்மொழியப்பட்டு அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்வானி அமைச்சர் அல்ல
பாஜகவின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானி தனது மகள் பிரதிபாவுடன் கலந்து கொண்டார்.
அமைச்சரவையில் அத்வானி இடம் பெற மாட்டார் என்பது முன்பே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் நடப்பு அதிபர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவுக்கு வரும்போது, அடுத்த இந்திய அதிபராக அத்வானி முன்மொழியப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியாவின் போபால் நகரின் வீதியொன்றில் வைக்கப்பட்டிருக்கும் தொலைக்காட்சியின் வழி மோடியின் பதவியேற்பை கண்டு ரசிக்கும் மக்கள்! விநியோகத்திற்காக காத்திருக்கும் லட்டுகள்!
படங்கள் : EPA