கொழும்பு, மே 28 – விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் மலேசியாவில் கைது செய்யப்பட்ட 3 பேர், இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். இதுகுறித்து இலங்கை காவல்துறை மூத்த அதிகாரி அஜித் ரோஹானா தெரிவிக்கையில்,
“ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் அகதிகள் அடையாள அட்டைகளுடன் தங்கியிருந்த 3 விடுதலைப்புலிகள் மலேசிய போலீஸாரால், கடந்த 15-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
3 பேரும் திங்கள்கிழமை இரவு கொழும்பு வந்து சேர்ந்தனர். அவர்களிடம் இலங்கை தீவிரவாத புலனாய்வு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, விடுதலைப்புலிகள் அமைப்பில் புலனாய்வு பிரிவில் பணியாற்றிய ஒருவர் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டார்’ என்றார்.
இதனிடையே, இலங்கை கிழக்கு மாகாண கவுன்சிலில், 2009-ஆம் ஆண்டு இறுதி கட்ட போரில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளுக்கு நினைவு அஞ்சலி செலுத்த முக்கிய எதிர்க்கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முயற்சித்தனர்.
தமிழ்தேசிய கூட்டமைப்பை சேர்ந்த 11 கவுன்சிலர்கள், கருப்பு நிற சால்வையை அணிந்தபடி கவுன்சிலுக்கு வந்து அஞ்சலி செலுத்த முயற்சித்தனர். ஆனால் அவர்களை கிழக்கு மாகாண கவுன்சில் தலைவர் ஆரியவதி காலாபாத்தி அனுமதிக்கவில்லை.