Home அவசியம் படிக்க வேண்டியவை மலேசியாவை ஆட்டிவைத்த “370” – இனி காஷ்மீரையும், இந்தியாவையும் ஆட்டிவைக்கப் போகின்றது!

மலேசியாவை ஆட்டிவைத்த “370” – இனி காஷ்மீரையும், இந்தியாவையும் ஆட்டிவைக்கப் போகின்றது!

796
0
SHARE
Ad

புதுடில்லி, மே 28 – எண் கணித நிபுணர்களெல்லாம் ஒன்று கூடி ஒரு மாநாடு நடத்தி, 370 என்ற எண்ணின் சிறப்பம்சங்களை ஆராய்ந்து, அந்த எண்ணுக்கு ஜாதக ரீதியாக ஏதாவது முக்கியத்துவம் இருக்கின்றதா என்பதை ஆராய வேண்டும்.

சரித்திரத்தில் என்றும் இடம் பெறப் போகும் எண்ணாக – இன்னும் பல்லாண்டுகளுக்கு எண்ணற்ற சர்ச்சைகளுக்கும் ஆரூடங்களுக்கும் வழி வகுக்கும் எண்ணாக 370 திகழும்.

அதற்குக் காரணம் காணாமல் போன மாஸ் விமானத்தின் பயணப் பாதை எண் எம்எச் 370 என்பதாகும்.

#TamilSchoolmychoice

காஷ்மீரிலும் இன்னொரு 370 எண் சர்ச்சை

தற்போது இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்திலும் இந்த 370 என்ற எண் சர்ச்சைகளையும், அரசியல் புயலையும் கிளப்பியுள்ளது.

இந்திய அரசியல் சாசனம் அமைப்பில் , ஜம்மு-காஷ்மீர் பகுதிகளுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரிவின் எண்தான்  370 என்பதாகும்.

Dr-jatender

டாக்டர் ஜிதேந்திர சிங்

நேற்று முன்தினம் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் பிரதமர் அலுவலகத்தின் இணை அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் டாக்டர் ஜிதேந்திர சிங்,

சர்ச்சைக்குரிய அரசியல் அமைப்புப் பிரிவு 370 குறித்து விவாதிக்க புதிய அரசாங்கம் தயாராக இருப்பதாக நேற்று அறிவித்து, இந்த விவகாரம் குறித்த அரசியல் கொந்தளிப்பை கொளுத்திப் போட்டிருக்கின்றார்.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து விவகாரம் குறித்து மாநில பாஜக பல்வேறுஅமைப்புகளிடம் ஆலோசித்துள்ளது என்றும் இதற்காக காஷ்மீரில் பல  கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்திருக்கின்றோம் என்றும் ஜிதேந்திர சிங் அறிவித்திருக்கின்றார்.

பாஜகவின் தேர்தல் கொள்கை அறிக்கையில் அரசியல் சாசன பிரிவு எண் 370ஐ தாங்கள் குறிப்பிட்டிருப்பதால், அது குறித்து விவாதிக்கும், முடிவெடுக்கும் கடப்பாட்டில் தாங்கள் இருப்பதாக ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

நடந்து முடிந்த தேர்தலில் காஷ்மீரில் உத்தம்பூர் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக வென்றவரான ஜிதேந்திர சிங்,அந்த தொகுதியில் காங்கிரசின் பலம் பொருந்திய வேட்பாளரும் அமைச்சருமான குலாம் நபி ஆசாத்தைத் தோற்கடித்த பெருமையைப் பெற்றவர்.

ஒமர் அப்துல்லா எதிர்ப்பு

M_Id_392657_Omar_Abdullahஇதற்கிடையில் ஜிதேந்திர சிங்கின் கருத்துக்கு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா (படம்) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் அகப்பக்கத்தில் காஷ்மீரை மற்ற இந்தியப் பகுதிகளுடன் இணைக்கும் ஒரே தொடர்பு  அரசியல் சாசனப் பிரிவு 370தான், இது குறித்து பேசுவது முறையல்ல என ஒமர் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.

370 பிரிவை ரத்து செய்தால், அதனால் காஷ்மீர் இந்தியாவிலிருந்து பிரியும் என்ற தோரணையில் ஒமர் அப்துல்லா தனது ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து வேறு சில தரப்புகளிலிருந்தும் எதிர்ப்புகள் வலுத்திருப்பதைத் தொடர்ந்து, தான் 370ஐ ரத்து செய்ய சொல்லவில்லை என்று ஜிதேந்திர சிங் பின்னர் தெரிவித்திருக்கின்றார்.

இருப்பினும், அவரது பேச்சால், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனப் பிரிவு 370 இனியும் தேவைதானா என்ற வாதப் பிரதிவாதங்கள் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியுள்ளன.

ஆக, இதுவரை மலேசியாவின் வாயிலாக, அகில உலகையே ஆட்டுவித்த காணாமல் போன விமானத்தின் எண் 370 இப்போது காஷ்மீரிலும் இந்தியாவிலும் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.

இனி பாஜக ஆட்சியில் இருக்கும் அடுத்த 5 ஆண்டுகளுக்கும் இந்த ‘370’ எண் – மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த – சர்ச்சைகளின் கதாநாயக எண்ணாக – தொடர்ந்து திகழ்ந்து வரும் என்பதில் ஐயமில்லை.

அதனால்தான் கேட்கின்றோம் – எண் கணித நிபுணர்களே! இந்த 370 எண்ணுக்கு ஏதாவது சிறப்பம்சங்கள் இருக்கின்றதா?

-இரா.முத்தரசன்