புதுடில்லி, மே 28 – நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா டில்லியில் நேற்று நடந்தது. இதில் பிரதமராக மோடி மற்றும் அமைச்சர்களும் பதவி ஏற்றனர். இந்த பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள முதல் முறையாக தெற்காசிய கூட்டமைப்பு (சார்க்) நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே மற்றும் வங்கதேசம், மாலத்தீவு, ஆப்கானிஸ்தான், பூடான், நேபாளம் ஆகிய 7 நாடுகளின் தலைவர்கள் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் இலங்கையில் தமிழர்களின் மறுவாழ்வு, பாதுகாப்பு நிலைநாட்டப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவிடம் கண்டிப்புடன் கூறியுள்ளார்.
இதற்கிடையே நேற்றுக் காலை 10.40 மணிக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே மோடியை சந்தித்து பேசினார். சுமார் 20 நிமிடங்கள் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில் இலங்கை வாழ் தமிழர்களின் பாதுகாப்பு, மறுவாழ்வு மற்றும் மறுசீரமைப்பு பணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது.
தமிழர்கள் நிலையில் இந்தியாவின் உணர்வை அந்நாடு மதிக்கும் என்ற நம்பிக்கை நேற்றைய பேச்சின் மூலம் ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்த மோடி மீனவர்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் இலங்கையில் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். மோடி-ராஜபக்சே சந்திப்பு குறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங் அளித்த பேட்டியில் “இலங்கை வாழ் தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் குறித்து ராஜபக்சேவுடன் நடந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டது.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்கப்படுவதை தடுக்க வேண்டும், தமிழர்களின் பாதுகாப்பு நிலைநாட்டபடவேண்டும் என்று ராஜபக்சேவிடம் மோடி வலியுறுத்தினார்.
பின்னர், இலங்கைக்கு வருமாறு இலங்கை அதிபர் ராஜபக்சே, மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார் அதை ஏற்று மோடி ஜீலைக்கு பின் வருவதாக தெரிவித்தார் என்று சுஜாதா சிங் தெரிவித்தார்.