டெல்லி, மே 29 – நாடாளுமன்ற விவகாரங்கள் துறை முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான கமல்நாத்தை, நாடாளுமன்ற தற்காலிக தலைவராக நியமிக்க குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பரிந்துரைத்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, தற்போதைய நாடாளுமன்ற அவையின் முதல் கூட்டத்தொடர் அடுத்த வாரம் தொடங்க உள்ளது. கூட்டத்தொடரில் நாடாளுமன்ற தற்காலிக தலைவராக காங்கிரஸ் மூத்த உறுப்பினர் கமல்நாத்தை நியமிக்க குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்துள்ளோம்.
தற்காலிக தலைவராக பொறுப்பேற்பவர், புதிய உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். அவருக்கு உதவியாக மூத்த உறுப்பினர்கள் 4 பேரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
அதிக வசதி, சுற்றுச்சூழல், தொடர்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் 100 நவீன நகரங்களை உருவாக்க முன்னுரிமை அளிக்கப்படும். இதற்காக ஜவாஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற மறுகட்டமைப்புத் திட்டத்தின்கீழ் விரைவில் ஒரு திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்.
ஆன்மிக நகரங்களை தூய்மைப்படுத்தவும், குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு வீடு அமைத்துத் தரவும் திட்டமிட்டுள்ளோம். அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் “அனைவருக்கும் வீடு’ என்ற திட்டத்தை 2020-ஆம் ஆண்டுக்குள் அடைய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று வெங்கய்ய நாயுடு கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் நகர்ப்புற வளர்ச்சி, வீட்டு வசதி, நகர்ப்புற வறுமை ஒழிப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள வெங்கய்ய நாயுடு, டெல்லி நிர்மாண் பவனில் உள்ள அமைச்சக அலுவலகத்தில் புதன்கிழமை பொறுப்பேற்றார்.