டெஹ்ரான், மே 29 – நட்பு ஊடகமான பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஜூகர்பெர்க் நேரில் வர ஈரான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரான் நாட்டு அரசு துணை செய்தி நிறுவனமான இஸ்னா இது குறித்து வெளியிட்டுள்ள செய்தியில், “பேஸ்புக் இணையத்தளத்தில் உறுப்பினர்களாக இருக்கும் ஈரான் நாட்டினர், அந்த இணையத்தளத்தில் இருக்கும் ‘இன்ஸ்ட்கிராம்’ (Instagram), ‘வாட்ஸ் அப்’ (Whats app) ஆகிய வசதிகளை பயன்படுத்துவது, தங்களது தனிப்பட்ட வாழ்க்கை ரகசியங்களில் தலையிடுவது போல் இருக்கிறது என்று குற்றஞ்சாட்டி பார்ஸ் மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஈரானில் இன்ஸ்ட்கிராம், வாட்ஸ் அப் ஆகிய வசதிகளை முடக்கி வைக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. மேலும், மார்க் ஜூகர்பெர்க் நீதிமன்றத்தில் நேரில் தோன்றும்படி உத்தரவிட்டுள்ளது என பிரபல செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஈரான் நாட்டில் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக இணையதளங்கள் அதிகாரப்பூர்வமாக முடக்கி வைக்கப்பட்டுள்ளன. எனினும், தலைநகர் டெஹ்ரான் உள்பட சில பகுதிகளில் மட்டும் அந்த இணையத்தளங்கள் திரைமறைவாக செயல்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அப்படி ஒரு உத்தரவை ஈரானிய நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை என அந்நாட்டு நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞர் அலி அல்காஸ்மெர் கூறியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளிவருகின்றன.