கோலாலம்பூர், மே 30 – இந்தியப் பெருங்கடலின் ஆழத்தில், சமிக்ஞைகள் கிடைத்த திசையில், மாயமான மலேசிய விமானத்தை தேடித்தேடி ஓய்ந்து போன ஆஸ்திரேலியா, விமானம் இந்தியப் பெருங்கடலில் விழவே இல்லை என நேற்று அறிக்கை விடுத்தது.
இருப்பினும், மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக் அதை ஒப்புக் கொள்வதாய் இல்லை.
குறிப்பிட்ட இடத்தில் நடைபெறும் தேடுதல் பணியில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என நேற்று சீனாவில் பெய்ஜிங் நகரில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் நஜிப் தெரிவித்துள்ளார்.
மலேசியா – சீனா இடையிலான 40 ஆண்டு கால நல்லுறவையொட்டி, 6 நாட்கள் சீனாவிற்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள நஜிப்பிடம், ஆஸ்திரேலியா கூட்டு முகமை ஒருங்கிணைப்பு மையம் (Joint Agency Coordination Centre) வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து நேற்று அங்குள்ள செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த நஜிப், “தேடுதல் பணியில் மலேசியாவின் நிலைப்பாடு மாறாது” என்று கூறியுள்ளார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது அவருடன் இருந்த இடைக்காலப் போக்குவரத்து அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன், இந்தியப் பெருங்கடலில் ஆழ்கடல் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த கருவிகள் தங்கள் பணிகளை நிறுத்திக் கொண்டதை உறுதிப்படுத்தினார்.
“நாம் அடுத்தக் கட்ட ஆழ்கடல் தேடுதல் பணிக்கு போக வேண்டி இருப்பதால், தற்போது இந்த கருவிகள் தங்கள் பணிகளை நிறைவு செய்கின்றன” என்று ஹிஷாமுடின் தெரிவித்தார்.
இந்த புதிய தேடுதல் பணிக்குத் தேவையான கருவிகளை பயன்படுத்த பெட்ரோனாஸ் மற்றும் டெஃப்டெக் ஆகிய நிறுவனங்கள் நிதியுதவி செய்யவுள்ளதாகவும் ஹிஷாமுடின் குறிப்பிட்டார்.
கடந்த மார்ச் 8 -ம் தேதி, 239 பயணிகளுடன் மாயமான எம்எச்370 மலேசிய விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு பணியகம் (The Australian Transport Safety) நேற்று வெளியிட்ட அறிக்கையில், இதுவரை விமானத்தின் ஒலி சமிஞைகள் கிடைப்பதாக கூறப்பட்டு வந்த தென் இந்தியப் பெருங்கடல் பகுதியில் விமானம் விழவே இல்லை என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.