சென்னை, ஜூன் 4 – கருணாநிதியின் 91 ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று 3.6.2014 செவ்வாய்க்கிழமை மாலையில் நடைபெற்றது. அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
“திமுகவில் விரைவில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும், அந்த மாற்றங்களுக்குப் பிறகு திமுக கூர் தீப்பட்ட வாளாகவும், பட்டை தீட்டிய வைரமாகவும் ஜொலிக்கும் எனவும் அவர் கூறினார்.
தோல்வியைக் கண்டு துவண்டு போகும் இயக்கமில்லை திமுக. தற்போது திமுகவின் தோல்விக்காக பரிகாசம் செய்பவர்கள் அனைவரும் எதிர்காலத்தில் திமுக பெறப்போகும் வெற்றியைக் கண்டு வாய் பிளந்து நிற்பர்.
திமுகவின் சிலர் பழுது ஏற்பட்டிருப்பதாக கருத்து தெரிவித்தனர். அது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என சிலர் கேள்வி எழுப்பக் கூடும். இதற்கெல்லாம் அதிரடி மாற்றங்களின் மூலம் தெரிய வரும் என்றும் அவர் சொன்னார்.
கட்டுக்கோப்பாக நடந்த திமுகவின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் இது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த முடிவை அறிவித்து விடலாம் என்றுகூட துடித்தோம். எனினும், பிறந்த நாள் சமயத்தில் அந்த முடிவுகளைத் தெரிவிக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் தள்ளிப் போட்டுள்ளோம்.
இதற்கிடையே தமக்கும் க.அன்பழகனுக்கும் இடையிலான நட்பை யாரும் பிரிக்க முடியாது என்று கருணாநிதி பொதுக்கூட்டத்தில் பேசினார். திருவாரூரில் அன்பழகனை முதன்முதலாக சந்தித்தது பற்றி கருணாநிதி நினைவுகூர்ந்தார். அடுத்து பெறப்போகும் வெற்றிக்கு முன் அறிவிப்பாக தற்போதைய விழா நடக்கிறது எனவும் கருணாநிதி கூறினார்.