கோலாலம்பூர், ஜூன் 4 – மலேசியாவில் இயங்கி வரும் பேரங்காடிகளில் மிகப் பெரியதும் பிரபலமானதுமான மைடின் பேரங்காடிகளில் ஜிஎஸ்டி வரிகளால் பொருட்களின் விலைகள் உயர்த்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மைடின் முகமட் ஹோல்டிங் பெர்ஹாட் நிர்வாக இயக்குநர் டத்தோ அமீர் அலி மைடின் இந்தத் தகவலை தெரிவித்தார்.
அடுத்தாண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலாக்கத்திற்கு வரவிருக்கும் ஜிஎஸ்டி எனப்படும் பொருள் சேவை வரிகளால் ஏற்படக் கூடிய அனைத்து நடைமுறைகளையும் ஒருங்கிணைப்பதற்கு ஓர் ஆலோசகர் நியமிக்கப் பட்டுள்ளதாகவும் அமீர் அலி தெரிவித்தார்.
“பொருள் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டப் பின்னர் மைடின் பேரங்காடியின் பொருட்கள் தற்போது உள்ள விலையிலேயே இருந்து வரும் அல்லது அதற்கு குறைவாக இருந்து வரும்” என்றும் அவர் மேலும் கூறினார்.
அதேவேளையில், தற்போது 16 சதவீதமாக இருந்து வரும் விற்பனை மற்றும் சேவை வரி ரத்து செய்யப்பட்டு ஜிஎஸ்டி எனப்படும் பொருள் சேவை வரி 6 சதவீதமாக அறிமுகப்படுத்தப்பட விருக்கின்றது என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும் என அமீர் அலி குறிப்பிட்டார்.
பொருள் சேவை வரி குறித்த மக்களின் அச்சங்களை நீக்குவதற்கு அரசாங்கம் தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
இதற்கிடையில், மைடின் பேரங்காடிகளில் ‘டச் அண்ட் கோ’ எனப்படும் முன் கட்டணம் செலுத்தப்பட்ட அட்டைகள் பொருட்களை வாங்குவதற்காக பயன்படுத்தப்படும் திட்டம் தொடக்கப்பட்டுள்ளது.