நியூயார்க், ஜூன் 5 – கூகுள், உலகின் அனைத்து பகுதிகளுக்கும் தனது இணைய தொழில்நுட்பத்தினை கொண்டு செல்ல பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
அதற்கான முன்னோட்டமாக பலூன்கள் மூலமாக இணைய சேவை (Project Loon), ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் இணைய சமிஞ்ஞை அனுப்புதல் போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.
அந்த வரிசையில் தற்போது, செயற்கைக்கோள்கள் மூலம் உலகின் அனைத்து பகுதிகளுக்கும் ‘வைஃபை’ (Wifi) இணைப்புகளை வழங்க இருப்பதாக ‘வால் ஸ்ட்ரீட் ஜெர்னல்’ பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அதிக திறன் கொண்ட சிறிய அளவிலான, 180 செயற்கைக்கோள்களை பூமியின் சுற்று வட்டப் பாதையில் நிலை நிறுத்தி அதன் மூலம் வைஃபை இணைப்புகளை வழங்க கூகுள் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய திட்டத்திற்காக சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய கூகுள் முடிவு செய்துள்ளது” என்று வெளியிட்டுள்ளது.
இந்த திட்டத்திற்காக கிரெக் வைலர் எனபவரின் தலைமையில் செயல்படும் ஓ3பி நெட்வொர்க் லிமிடெட் (O3b Networks Ltd) என்ற நிறுவனத்தை கூகுள் அணுகியுள்ளதாக கூறப்படுகின்றது. எதிர்காலத்தில் இந்த திட்டத்திற்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை வழங்க கூகுள் தயாராக இருப்பதாகக் கூறப்படுகின்றது.
நட்பு ஊடகமான பேஸ்புக் நிறுவனமும் இதே போன்றதொரு திட்டத்தினை செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.