கோலாலம்பூர், ஜூன் 5 – தெலுக்இந்தான் இடைத்தேர்தலில் மா சியூ கியோங் வென்றுள்ளதையடுத்து கெராக்கான் கட்சியின் தேசியத் தலைவரான அவர் முழு அமைச்சராக நியமிக்கப்படுவது உறுதியாகி விட்டது.
இந்த உறுதிமொழியை பிரதமர் நஜிப் தெலுக்இந்தான் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போன்று மலேசிய சீன சங்கமும் (மசீச) மீண்டும் தேசிய முன்னணியில் இணைவதற்கு தனது பொதுப் பேரவை தீர்மானம் மூலம் ஒப்புக்கொண்டுள்ளது.
இதன் காரணமாக மசீச-வின் தேசியத் தலைவர் லியோவ் தியாங் லாய், வீ கிட் சியாங் ஆகிய இருவரும் முழு அமைச்சர்களாக பதவியேற்பதும் ஏறத்தாழ உறுதியாகி விட்டது.
எனவே, நிகழப்போகும் அமைச்சரவை மாற்றங்களில் மஇகா அமைச்சர்களும் பாதிக்கப்படுவார்கள் என்ற ஆருடங்கள் வலுத்து வருகின்றன. காரணம், சுகாதார அமைச்சு பாரம்பரியமாக மசீச வசம் இருந்து வந்திருக்கின்றது. அமைச்சரவைக்கு திரும்பவிருக்கும் மசீச தலைவர் லியோவ் ஏற்கெனவே சுகாதார அமைச்சராக இருந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனால் அவர் மீண்டும் சுகாதார அமைச்சராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், நடப்பு சுகாதார அமைச்சரான மஇகாவின் தேசியத் துணைத் தலைவரான டாக்டர் சுப்பிரமணியம் ஒரு மருத்துவராக இருப்பதால் சிறப்பான முறையில் சுகாதார அமைச்சை வழி நடத்தி வருகின்றார் என்று அரசாங்க வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், டாக்டர் சுப்ரமணியம் தொடர்ந்து சுகாதாரதுறை அமைச்சரா நீடிப்பாரா? அல்லது மாற்றப்படுவரா என்ற கேள்வி அலைகள் மஇகா வட்டாரங்களில் பரவி வருகின்றன.
டத்தோ பழனிவேலு மாற்றப்படுவாரா?
அண்மைய காலங்களில் பிரதமர் துறையின் கீழ் இந்தியர் விவகாரங்களுக்கான அமைச்சரவை செயலாக்கக் குழு மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு தீவிரமான முறையில் செயலாற்றி வருகின்றது.
ஏற்கெனவே பிரதமர் துறையில் கீழ் இந்தியர் விவகாரங்களுக்கான அமைச்சரவையில் துணை அமைச்சாராக இருந்த வேதமூர்த்தி பதவி விலகிவிட்டார்.
இதன் காரணாமாக பிரதமர் துறை அமைச்சுக்கு மஇகா அமைச்சர் ஒருவரை நியமித்து அதன்வழி இந்தியர் விவகாரங்களையும் செயல் நடவடிக்கைகளையும் கவனித்துக் கொள்ள பிரதமர் முடிவு செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.
அப்படிப்பட்ட முடிவு எடுக்கப்படுமானால் பழனிவேல் அல்லது டாக்டர் சுப்ரமணியம் இருவரில் ஒருவர் பிரதமர் துறை அமைச்சராக நியமிக்கப்படலாம் என்றும் நம்பப்படுகிறது.
வேதமூர்த்திக்கு பதிலாக மஇகா அல்லாத துணை அமைச்சரா?
மஇகாவை சாராத ஒருவரான வேதமூர்த்தியை, நஜிப் கடந்த ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் துணை அமைச்சராக நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அதேபோன்று இந்த முறையும் மஇகாவுக்கு வெளியில் இருக்கும் ஒருவரை துணை அமைச்சராக நியமித்து இந்தியர் விவகாரங்களை கவனித்துக்கொள்ள பிரதமர் முடிவெடுக்கலாம் என்றும் ஒரு சில அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போது செனட்டர்களாக இருக்கும் டத்தோ நல்லா, மக்கள் சக்தித் தலைவர் ஆர்.எஸ்.தனேந்திரன், கிம்மா கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் ஆகிய மூவரில் ஒருவர் வேதமூர்த்திக்கு பதிலாக துணை அமைச்சராக நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.
அதே சமயம் மஇகா சார்பிலும் வேதமூர்த்தி வகித்த துணையமைச்சர் பதவியை மஇகாவுக்கே வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமரிடம் மஇகா சமர்ப்பித்துள்ளதாக ஒரு மஇகா வட்டாரம் தெரிவித்துள்ளது.
இந்த மாதத்தில் காலியாகவுள்ள மூன்று செனட்டர் பதவிகளுக்கு புதிய மஇகா தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று பழனிவேல் ஏற்கெனவே அறிவித்திருக்கின்றார். அப்படி நியமிக்கப்படும் மூவரில் ஒருவர் வேதமூர்த்தி வகித்த துணையமைச்சர் பதவிக்கு நியமிக்கப்படலாம் என்றும் அதன்மூலம் மஇகாவுக்கு கூடுதலாக ஒரு துணையமைச்சர் பதவி கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் நஜிப்பின் புதிய அமைச்சரவை குறித்த அறிவிப்புகள் அடுத்த சில நாட்களில் வெளியிடப்படலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.