கெடா, ஜூன் 5 – மஇகா தேசிய உதவித் தலைவரும் இளைஞர் விளையாட்டுத்துறை துணைமைச்சருமான டத்தோ எம்.சரவணன் தலைமையில் உருவாகியுள்ள நாம் அறவாரியத் திட்டத்திற்கு கெடா மாநில அரசாங்கம் எல்லா வகையான உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்கும் என கெடா மாநில மந்திரி புசார் முக்ரிஸ் மகாதீர் தெரிவித்துள்ளார்.
நேற்று டத்தோ சரவணன் மரியாதை நிமித்தமாக கெடா மந்திரி புசாரை சந்தித்த போது இந்த உறுதிமொழியை முக்ரிஸ் மகாதீர் வழங்கினார்.
இந்திய சமுதாயத்தினரை குறிப்பாக இளைஞர்களை சிறு வர்த்தகங்களிலும், விவசாய முயற்சிகளிலும் ஈடுபடுத்தும் திட்டமான நாம் திட்டம் கெடா மாநிலத்தில் மேற்கொள்ளப்பட தனது முழு ஆதரவையும் வழங்குவதாகவும் மந்திரி புசார் முக்ரிஸ் உறுதியளித்துள்ளார்.
முக்ரிஸ் மகாதீரை சந்தித்த போது தனது கனவுத் திட்டமான நாம் அறவாரியம் பற்றிய விவரங்களை முக்ரிஸ் மகாதீரிடம் தான் எடுத்துக் கூறியதாக சரவணன் தெரிவித்துள்ளார்.
நாம் திட்டம் கொண்டுள்ள இலக்குகள் பாராட்டுக்குரியவை என்றும், குறிப்பாக இளைய சமுதாயத்தின் பொருளாதார வலிமையை உணர்த்தும் வண்ணம் குறிவைத்து இந்தத் திட்டங்கள் வகுக்கப்பட்டள்ளது தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாகம் முக்ரிஸ் மகாதீர் தெரிவித்துள்ளார்.
கைத்தொழில்களிலும் விவசாயத் திட்டங்களிலும் இந்திய இளைஞர்கள் ஈடுபடுத்தப்படுவதால் அதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரம் உயரும் என்பதோடு அவர்கள் கூடுதல் வருமானம் பெற முடியும். இதன் காரணமாக மாநிலமும் வளர்ச்சி அடையும் என்றும் முக்ரிஸ் நம்பிக்கைத் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்ட நாம் திட்டம் இந்தியர்களை பொருளாதாரத்தில் வலிமை பெறச் செய்யும் அரசாங்க ஆதரவு திட்டமாகும். இதன் மூலம் ஒரு லட்சம் இந்திய இளைஞர்களின் வாழ்க்கைத் தரத்தையும் வாழ்க்கைச் சூழலையும் மாற்றி அமைக்க நாம் குறிக்கோள் கொண்டுள்ளது.