கோலாலம்பூர், ஏப்ரல் 29 – இந்திய சமுதாயம் விவசாயத்தில் மேம்பாடு அடையவும் பொருளாதாரத்தில் உயரவும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நாம் இயக்கத்தில் இதுவரை 27,000 இந்திய இளைஞர்கள் இணைந்துள்ளனர் என்று இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை துணை அமைச்சர் டத்தோ எம்.சரவணன் நேற்று கூறினார்.
கோலாலம்பூரில் கிராண்ட் சீசன் தங்கும் விடுதியின் 8ஆவது மாடியில் உள்ள நாம் இயக்கத்தின் தலைமையகம் டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலு தலைமையில் நேற்று அதிகாரபூர்வமாக திறப்பு விழா கண்டது.
நாம் தலைமையகத்தைத் திறந்து வைத்த சாமிவேலு, சரவணனின் முயற்சியைப் பாராட்டியதோடு, இந்த இயக்கம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் தனது உரையில் கூறினார்.
இவ்விழாவில் பேசிய நாம் இயக்கத்தின் தலைவரும், ம.இ.கா தேசிய உதவித் தலைவருமான, டத்தோ எம்.சரவணன் “உழைப்பதற்கு இந்திய சமுதாயம் தயாராக இருந்தால் நாம் இயக்கத்தின் மூலமாக அவர்களுக்கு வழிகாட்ட தாம் தயார்” என்று குறிப்பிட்டார்.
“பொருளாதாரத்தில் இந்திய சமுதாயம் உயர வேண்டுமானால் உழைப்பதற்கு முதலாவதாக நாம் தயாராக வேண்டும். மலேசியா விவசாயம் சார்ந்த நாடு. ஆகையால் இந்திய சமுதாயம் விவசாயத்தில் கால் பதித்தால் நன்கு பொருளாதாரத்தில் மேம்பாடு அடையலாம்” என்றும் சரவணன் சொன்னார்.
“ஒரு காலத்தில் இந்நாட்டில் விவசாயத்தில் முழுமையாக ஈடுபட்ட நம் சமுதாயம் தற்போது அதிலிருந்து விடுபட தொடங்கியுள்ளது. இதனால் அந்நிய நாட்டினர் அதிக அளவில் விவசாயத் துறையில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். அந்நிய நாட்டவர்கள் தங்களை மேம்படுத்தி கொள்கின்ற போது நாம் ஏன் அவ்வாறு செய்யாமல் – விவசாயத்தில் ஈடுபடாமல் இருக்கின்றோம் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். விவசாயத்தில் நாம் ஈடுபட்டால் பொருளாதாரத்தில் மேலும் உயர் நிலைக்கு வரலாம்” எனவும் அவர் சொன்னார்.
இந்திய இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட நாம் இயக்கம் அனைத்து உதவிகளையும் செய்யும் செய்யும் எனவும். அடுத்த மாதத்தில் இங்கு திறக்கப்பட்டுள்ளது போல் மாநிலம் முழுவதும் தொடர்ந்து கிளைகள் திறக்கப்படும் என்றும் சரவணன் கூறினார்.
இதுவரை சுமார் 27,000 பேர் நாம் இயக்கத்தில் உறுப்பினர்களாகப் பதிந்து கொண்டுள்ளனர் என்றும் இது நாம் இயக்கத்தின் வெற்றியையும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுவதாகவும் இருப்பதாக சரவணன் மேலும் கூறியுள்ளார்.
இந்நிகழ்வில் சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ எஸ்.சுப்பிரமணியம், கல்வி துறை துணை அமைச்சர் பி.கமலநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.