கோலாலம்பூர், ஏப்ரல் 29 – இந்தியா செல்வதற்கான விசாவைப் பெற விண்ணப்பதாரர்கள் நேரடியாக கைரேகைப் பதிவுக்காக வரவேண்டும் என்ற நிபந்தனையை இந்திய தூதரகம் அண்மையில் அமுல்படுத்தியுள்ளதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சையால், இம்முறை எதிர்வரும் ஒரு மாதத்திற்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பயோமெட்ரிக் எனப்படும் கைரேகை பதிவு முறை பயணிகளுக்கு சிரமங்கள் இல்லாத வகையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமென பரவலாக மலேசிய இந்தியர்கள் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக் கொண்ட இந்திய தூதரகம் முன்பு இருந்தது போல் பிரதிநிதிகள் மூலமாக விசா பெறும் முறையே தொடரும் என ஒப்புக் கொண்டுள்ளது என மஇகா தலைமைச் செயலாளர் பிரகாஷ் ராவ் தெரிவித்தார்.
ஏப்ரல் மாதத்தில் அமல்படுத்தப்பட்ட திட்டத்தால் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளவிருந்த பயணிகள் கடும் அதிருப்திகளை எதிர்கொண்டனர்.
இப்பொழுது கைரேகை பதிவு என்பதால் பயணிகளே நேரடியாக கோலாலம்பூர் வந்து இந்தியாவிற்கான விசாவைப் பெற வேண்டிருந்தது. இதனால் வயதானவர்கள், ஊனமுற்றவர்கள் போன்றோர் பல சிரமத்திற்கு ஆளாக வேண்டியிருக்கிறது என்று இந்திய தூதர் திருமூர்த்தியை சந்தித்து இந்நிலைமையைத் தாங்கள் எடுத்துக் கூறியதாக பிரகாஷ் ராவ் தெரிவித்தார்.
இந்த கைரேகை முறையிலான விசா பெறும் முறையில் பயணிகளின் வசதிக்கேற்ப மாற்றம் கொண்டு வர வேண்டும். அதாவது சீனத் தூதரகம் போன்று பயணிகள் பிரதிநிதிகள் அல்லது சுற்றுலா முகவர்கள் வாயிலாக விசாவைப் பெற அனுமதிப்பதோடு விமான நிலையத்தில் அவர்கள் கைரேகையை சோதனையிட அனுமதிக்க வேண்டும் என்றும் இந்திய தூதரகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களை கருத்தில் கொண்டு பொருத்தமான நடவடிக்கை எடுத்த இந்தியத் தூதருக்கு ம.இ.கா தலைமைச் செயலாளர் பிரகாஷ் ராவ் நன்றி தெரிவித்துக் கொண்டார்.