கோலாலம்பூர், ஜூன் 6 – ம.இ.கா கட்சியில் நடக்கும் உட்கட்சிப் பூசல்கள் யாவும் அக்கட்சியைச் சேர்ந்தவர்களாலேயே பத்திரிக்கை அறிக்கைகளின் வாயிலாக வெட்ட வெளிச்சமாக்கப்பட்டு வரும் நிலையில், கட்சியின் முன்னாள் தலைவரான டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலு, கடந்த வாரம் பிரபல ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த நேர்காணல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ம.இ.கா -வின் நடப்பு தலைவரான டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுக்கு எதிராக, தனது மன குமுறல்களையெல்லாம் சாமிவேலு கொட்டித் தீர்த்துள்ளார். இதனால் ம.இ.கா-வைச் சேர்ந்த பழனிவேல் ஆதரவாளர்களின் கடும் சினத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கட்சிக்குள் தன்னால் கொண்டுவரப்பட்டு, வளர்த்து விடப்பட்ட பழனிவேல், கட்சியின் தலைவரானவுடன், தன்னை கண்டுகொள்ளவில்லை என்றும், கட்சியின் முன்னாள் துணைத்தலைவரான டான்ஸ்ரீ சுப்ரமணியத்துடன் காரணமின்றி தான் சண்டையிட்டு விட்டதாகவும் சாமிவேலு தனது நேர்காணலில் வருத்தத்துடன் கூறியுள்ளார்.
“சுப்பிரமணியத்துடன் சண்டை போட்டதற்கு எந்தவொரு காரணமும் இல்லை என்பதை நான் இப்போது உணர்கிறேன். நாடுமுழுவதும் சென்ற இடமெல்லாம் பழனிவேலை முன்னிலைப்படுத்தி அவரை பிரபலப்படுத்தினேன். அவரை அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தேன். ஆனால் அவர் மஇகா தேசியத் தலைவராகப் பொறுப்பேற்றதும் கட்சியில் எனக்கு எதுவும் இல்லாமல் போய்விட்டது. என்னுடன் பேசுவதையும், தொடர்பு கொள்வதையும் குறைத்துக் கொண்டார்” என்று சாமிவேலு கூறியுள்ளார்.
நீங்கள் பழனிவேலுவை தொடர்பு கொண்டீர்களா? என்ற செய்தியாளரின் கேள்விக்கு, அவ்வளவு பெரிய மனிதரை நான் எப்படி தொடர்பு கொள்வது என்றும் சாமிவேலு பதிலளித்துள்ளார்.
‘இன்னும் உங்களுக்கு என்னதான் வேண்டும்’
நடப்பு தலைவர் பழனிவேலு குறித்து சாமிவேலு கூறியுள்ள கருத்துக்கள், பழனிவேல் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ம.இ.கா ஏற்பாடு செய்யும் அத்தனை விழாக்களிலும் சாமிவேலு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு, பிரதமர் நஜிப் துன் ரசாக் அமரும் நாற்காலிக்கு அருகில் உட்கார வைக்கப்படும் பொழுது இன்னும் சாமிவேலுவுக்கு என்ன தான் வேண்டும் என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பழனிவேல் தலைமையிலான மஇகா, கட்சியின் நலனுக்காக கடுமையாக உழைத்து வருவதாகவும், கட்சியில் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளியும் முழு மூச்சோடு செய்து வருவதாகவும் பழனிவேல் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.
“தெலுக் இந்தான் இடைத்தேர்தலில் இந்தியர்களின் வாக்குகளைப் பெற, பழனிவேல் 13 நாட்கள் களத்தில் இறங்கி பாடுபட்டார். அதன் படி தெலுக் இந்தானை தேசிய முன்னணி எதிர்கட்சியிடமிருந்து மீட்டது. பழனிவேலின் இந்த உழைப்பிற்கு சாமிவேலு தனது வெளிப்படையான ஆதரவை தெரிவித்திருக்க வேண்டும். மாறாக அவர் பழனிவேல் குறித்து கூறியுள்ள கருத்துக்களை தொண்டர்களை நிலைகுலையச் செய்துள்ளது” என்று மஇகா கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சாமிவேலு காலத்து அரசியல் அமைப்பு தற்போது முற்றிலும் மாறுபட்டுவிட்டது. தனது காலத்தில் கட்சியை வழி நடத்தியதைப் போல் தற்போது நிர்வகிக்க முடியாது என்பதையும் சாமிவேலு ஒப்புக்கொள்ள வேண்டும். அவர் ஒரு மூத்த அரசியல் தலைவராக கட்சிக்கு தனது பங்களிப்பை செய்ய வேண்டும் என்றும் அந்த முக்கிய தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
சாமிவேலின் கருத்துக்கு பழனிவேலின் பதில் என்ன?
பழனிவேல் மீதிருந்த வெறுப்பை எல்லாம் சாமிவேலு, ஆங்கில பத்திரிக்கையான தி ஸ்டார் வாயிலாக கொட்டித்தீர்த்து விட்டார்.
இதுநாள் வரை இலை மறை காயாக இருந்த சாமிவேலுவுக்கும், பழனிவேலுக்கும் இடையிலான பனிப்போர் இப்போது வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.
மஇகா இளைஞர் பிரிவில் இருந்து சோமசுந்தரம் அண்மையில் நீக்கப்பட்டது போன்ற வேறு சில காரணங்களும் கட்சியில் உட்கட்சிப் பூசல்கள் ஏற்படக் காரணமாக இருந்தன.
இந்நிலையில் சாமிவேலு கருத்தால் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள உட்கட்சி கருத்து மோதல் விவகாரம், கட்சியின் தலைமைத்துவப் போராட்டமாக உருவாகி, பிரதமர் நஜிப் தலையிடும் அளவிற்கு போனாலும் ஆச்சர்யம் இல்லை என மஇகா வட்டாரங்கள் கூறுகின்றன.
சாமிவேலுவின் கருத்துக்கு பழனிவேல் இன்னும் நேரடியாக பதிலளிக்கவில்லை. அவரது பதிலுக்காக அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
விரைவில் பழனிவேல் சாமிவேலுவுக்கு பதிலளிக்கலாம் என்றாலும் பழனிவேலுவின் கடந்த கால அரசியல் நடவடிக்கைகளை வைத்துப் பார்க்கும்போது, பொதுவாக அவர் இதுபோன்ற பத்திரிக்கைப் போர்களையும், தனிநபர்களுடனான சர்ச்சைகளையும் தவிர்த்தே வந்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.