Home நாடு “நீங்கள் காட்டிய வழியில் மஇகாவை சிறப்பாக வழி நடத்துவோம்” – துன் சாமிவேலு நினைவு...

“நீங்கள் காட்டிய வழியில் மஇகாவை சிறப்பாக வழி நடத்துவோம்” – துன் சாமிவேலு நினைவு நாளில் விக்னேஸ்வரன் உறுதி

294
0
SHARE
Ad

உங்கள் நினைவுகளோடு, நீங்கள் காட்டிய வழியில் மஇகாவை சிறப்பாக வழி நடத்துவோம்”

-துன் ச.சாமிவேலு நினைவு நாளில் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் உறுதி

மஇகாவின் தேசியத் தலைவர் என்ற முறையில், இந்திய சமுதாயத்தினரோடும், எங்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இரண்டறக் கலந்திருந்த துன் சாமிவேலு அவர்கள் மறைந்து ஓராண்டு நிறைவடைந்து விட்டது. கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி அவர் மறைந்த பின்னரும் எங்களின் எண்ணங்களிலும், உணர்வுகளிலும், செயல்பாடுகளிலும் அவர் எப்போதும் – ஒவ்வொரு நாளும் – உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்” என துன் ச.சாமிவேலுவின் நினைவு நாளை முன்னிட்டு வெளியிட்ட பத்திரிகை அறிக்கையில் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மஇகாவின் 7-வது தேசியத் தலைவரான துன் சாமிவேலு, கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி காலமானார்.

“துன் அவர்களின் நினைவுகளை நெஞ்சில் சுமந்து கொண்டு, அவர் காட்டியிருக்கும் அரசியல் பாதையில், நாங்கள் சிறப்பாக மஇகாவை வழிநடத்துவோம் என்பதை இந்த வேளையில் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறோம். அவர் உருவாக்கிய எம்ஐஇடி, ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகம், டேஃப் கல்லூரி போன்ற திட்டங்கள் இன்றும் நமது இந்திய மாணவர்களுக்கான உயர்கல்வி பெறும் வாய்ப்புகளாகவும், நமது கட்சியின் செயல்பாடுகளுக்கு நிதி அம்சத்தில் உதவும் வகையிலும் திகழ்கின்றன” என்றும் விக்னேஸ்வரன் சாமிவேலுவுக்கு புகழாரம் சூட்டினார்.

#TamilSchoolmychoice

“அவர் நமக்காக வாங்கிய – மஇகா தலைமையகக் கட்டடத்தின் அருகாமையில் இருக்கும் – நிலத்தில்தான் நமது புதிய மஇகா தலைமையகக் கட்டடம் உருவாகத் தொடங்கியிருக்கிறது. இப்படியாக, மஇகாவின் அனைத்து செயல்பாடுகளிலும் ஏதாவது ஓர் அம்சத்தில், அவரின் பங்களிப்பும், நினைவும் எப்போதும் நீங்காமல் நிலைத்திருக்கும். இரண்டறக் கலந்திருக்கும். அன்னார் மறைந்து ஓராண்டு கடந்தாலும் இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், அவர் வகுத்துத் தந்திருக்கும் மகத்தான பாதையில் எங்களின் மஇகாவின் பயணம், இந்திய சமுதாயத்தின் நலன்களுக்காக, மேம்பாட்டுக்காக எப்போதும் தொடரும்” எனவும் விக்னேஸ்வரன் தன் அறிக்கையில் குறிப்பிட்டார்.

“துன் சாமிவேலுவின் துணிச்சல், மக்களுக்கான நேரம் காலம் பார்க்காத அயராத உழைப்பு, எந்த சூழ்நிலையிலும் இந்திய சமுதாயத்தின் நலன்களை விட்டுக் கொடுக்காத தீவிரம், என அவரின் சிறந்த பன்முக குணாதிசயங்களைத் துணையாகக் கொண்டு மஇகாவையும், இந்திய சமுதாயத்தையும் எந்த சூழ்நிலையிலும் கைவிடாமல், சமசரம் செய்து கொள்ளாமல், அவரின் நினைவுகளோடு வழிநடத்துவோம் என்ற உறுதிமொழியை அவரின் நினைவு நாளில் இந்தியர்களுக்கு நாங்கள் வழங்குகிறோம்” எனவும் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.