கிள்ளான் : இன்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 15) கிள்ளான் பொட்டானிகல் கார்டன் வட்டாரத்தில் மயூரவல்லி என்னும் பெயரிலான பூக்கள் – பழங்கள் விற்பனை செய்யும் கடையை டத்தோஸ்ரீ எம்.சரவணன் திறந்து வைத்தார்.
ராஜேந்திரன் கிருஷ்ணன் என்ற மகேஷ் இந்த விற்பனை மையத்தைத் தொடங்கியுள்ளார். தனது நிகழ்ச்சிகளிலும் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் நிகழ்ச்சிகளிலும் ராஜேந்திரன் பலவகைகளிலும் பங்கு பெற்றுள்ளார் என்றும் சரவணன் திறப்பு விழாவில் ஆற்றிய உரையில் தெரிவித்தார்.
“இந்தியர்கள் சொந்தத் தொழிலில் கால் பதிப்பது மகிழ்ச்சியான விஷயம். காலையில் விழித்தவனும், அயராமல் உழைத்தவனும் வாழ்க்கையில் உயர்வதைத் தடுக்க யாராலும் இயலாது. கிள்ளானில் பண்டார் பொட்டானிக் வட்டாரத்தில் ‘மயூரவல்லி’ எனும் காய்கறிகள், வழிபாட்டுப் பொருட்கள் மற்றும் பூக்கடையைத் திறந்து வைப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களை உதாரணமாகக் கொள்வோம், வாழ்வில் முன்னேறுவோம்” எனவும் சரவணன் குறிப்பிட்டார்.
“அழகாக, பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பூமாலைகள் இந்த விற்பனை மையத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். இந்தக் கடையில் பழங்களையும் விற்பனை செய்கிறார்கள். பழங்களும் காய்கறிகளும் இணைந்த உணவுகளை அதிக அளவில் உட்கொள்வது நமது உடல்நலத்திற்கு நல்லது. இதன் மூலம் வைட்டமின், கனிம வளங்கள் (மினரல்ஸ்) நார்ச்சத்துகள் அதிக அளவில் நம் உடலுக்குக் கிடைக்கும். இதனால் நமது உடல் நலத்தோடும், பலத்தோடும் திகழும்” எனவும் சரவணன் தெரிவித்தார்.
ராஜேந்திரனின் இந்த விற்பனை மையம் சிறப்பாக செயல்படவும் எதிர்வரும் காலத்தில் அதன் விற்பனை பன்மடங்காக உயரவும் வாழ்த்து தெரிவித்த சரவணன், கடுமையான உழைப்பில்லாமல் வெற்றியை அடைய முடியாது என்றும் கூறினார்.