வாஷிங்டன், ஜூன் 12 – வளர்ந்து வரும் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டும் மந்தமாகவே இருக்குமென்று உலக வங்கி அறிவித்துள்ளது.
மேலும், இந்த வருடத்தின் முதல் காலாண்டு வளர்ச்சி ஏமாற்றத்தை அளிப்பதாகவும், வளரும் நாடுகள் ஏழ்மையை போக்க வர்த்தகம், வேலைவாய்ப்புகளில் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றும் கூறுயுள்ளது.
உலக பொருளாதாரத்தை கணித்து அறிக்கைகள் வெளியிடும் உலக வங்கி, ஒரு வருடத்தில் இருமுறை உலக நாடுகளின் பொருளாதார நிலை பற்றி அறிக்கைகளை வெளியிடும். இம்முறை வெளிவந்துள்ள அறிவிப்பின் படி வளரும் நாடுகளின் வளர்ச்சி பெரும்பான்மையான நாடுகளில் ஐந்து சதவீதத்துக்கு குறைவாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உலக வங்கியின் தலைவர் ஜிம் யங் கிம் கூறுகையில், “உலகில் ஏழ்மை மிகுந்த நாடுகளில், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு தேவையான வேலைவாய்ப்புகளை உருவாக்கப் போதுமான பொருளாதார வளர்ச்சி இல்லை. அதனால் அந்நாடுகளில் சுமார் 40 சதவீதத்துக்கு அதிகமான மக்கள் வறுமையில் வாடுகின்றனர். இதனை போக்க அந்நாடுகள் மிகக் கடுமையாக முயற்சிக்க வேண்டும். உள் நாட்டு பொருளாதார கட்டமைப்புகளில் சரியான மாற்றங்களை கொண்டு வர வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஏழை நாடுகளின் எரிசக்தித்துறை, உட்கட்டமைப்புதுறை, வர்த்தகச் சந்தைகள் போன்றவற்றில் சில முக்கியப் பிரச்சினைகள் இருப்பதே இந்த மந்தமான வளர்ச்சிக்கு காரணம் என்று உலக வங்கியின் அறிக்கை தெளிவுபடுத்துகின்றது.
பொருளாதார சீர்திருத்த செயல்திட்டங்களை செயல்படுத்த அந்த நாடுகளின் அரசுகள் உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென உலக வங்கி அறிவுறுத்தி உள்ளது.