காத்மாண்டு, ஜூன் 24 – நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்தை மீண்டும் கட்டமைப்பதற்கு 500 மில்லியன் டாலர் நிதியுதவி அளிக்க உள்ளதாக உலக வங்கி அறிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்ற இந்நிலநடுக்கத்தில் 8,800 பேர் பலியானார்கள். 5 லட்சம் வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. 2 லட்சத்து 80 ஆயிரம் வீடுகள் மிதமான சேதத்தைச் சந்தித்தன.
இதன் காரணமாக ஆயிரக்கணக்கானோர் உணவுக்காகவும், சுத்தமான குடிநீருக்காகவும் தவிப்படைய நேரிட்டது. இதையடுத்து பல்வேறு நாடுகள் நேபாளத்துக்கு உதவி செய்வதாக அறிவித்தன.
இந்நிலையில், உலக வங்கித் தலைவர் ஜிம் யோங் கிம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நேபாள அரசுடனும், அதன் கூட்டு நாடுகளுடனும் இணைந்து அந்நாட்டை மீண்டும் கட்டமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்”.
“நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும். குறிப்பாக ஏழை மக்கள் வீடு கட்டிக்கொள்வதற்கும், அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் உரிய உதவிகளைச் செய்வோம். இதற்காக 500 மில்லியன் டாலர் நிதியுதவி அளிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
எனினும், நிலநடுக்க பேரிடரிலிருந்து மீண்டு வர அந்நாட்டிற்கு 6.7 பில்லியன் டாலர் தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.