கொழும்பு, ஜூன் 12 – விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்க இலங்கை வரும் ஐ.நா. விசாரணைக் குழுவை அனுமதிப்பது தொடர்பாக நாடாளுமன்றம் முடிவு செய்யும் என்று அந்நாட்டு அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் கூறியதாவது:-
“நாட்டை விடுதலை பெறச் செய்ததற்காக, ஒவ்வொரு ஆறு மாதமும் நாம் ஜெனீவாவுக்குச் சென்று பதிலளிக்க வேண்டியுள்ளது. இலங்கைக்கு எதிராக விசாரணை நடத்த தற்போது தனிநபர் ஒருவரை அவர்கள் நியமித்துள்ளனர். இந்த விஷயம் குறித்து எனக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது.
அவர் இங்கு வருவதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. நமக்கெதிரான போர்க்குற்றங்களை எழுப்புவதற்கு அவர் இங்கு வருகின்றார்.” “தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்ததற்காக சர்வதேச சமுதாயத்தால் எனது அரசு தண்டிக்கப்படுகிறது.
இலங்கை நாடாளுமன்றம் மக்கள் பிரதிநிதிகளின் மன்றம். நமது நாட்டில் ஐ.நா. விசாரணையை அனுமதிப்பது குறித்து நமது நாட்டு நாடாளுமன்றம் முடிவு செய்யும்” என்று அவர் கூறியுள்ளார்.