நியூயார்க், ஜூன் 12 – கடந்த 2009-ம் ஆண்டு, டென்மார்க் உலக சுற்றுச்சூழல் மாநாட்டின்போது, அப்போதைய சீன அதிபர் வென் ஜியாபோ வளரும் நாடுகளின் தலைவர்களுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்திய அறைக்குள், அமெரிக்க அதிபர் ஒபாமா அதிரடியாக நுழைந்த ருசிகர சம்பவத்தை, அந்நாட்டு முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தனது புத்தகத்தில் விவரித்துள்ளார்.
இதுகுறித்து ஹார்டு சாய்ஸஸ் என்ற புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்கள் மூலம் மிக அதிக அளவில் புகையை வெளியேற்றி வரும் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் காற்று மாசுபடுதலைக் குறைப்பதில் பொறுப்பேற்க வேண்டும் என்பதும், அப்போதுதான் புவி வெப்பமாதலைத் தடுப்பது சாத்தியமாகும் என்பதும் அமெரிக்காவின் நிலைப்பாடு.”
“எனினும் சீன முன்னாள் அதிபர் வென் ஜியாபோ, அந்தப் பொறுப்பைத் தட்டிக் கழிக்கவும், அமெரிக்காவை இந்த விவகாரத்தில் தனிமைப்படுத்தவும் விரும்பினார். இதற்காக அவர் மாநாட்டுக்கு வந்திருந்த இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனை அறிந்த ஒபாமா அவர்களின் அறைக்குள் அதிரடியாக நுழைந்து, சீனப் பிரதமரின் திட்டத்தை முறியடித்தார்” என்று ஹிலாரி கிளிண்டன் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.