டோக்யோ, ஜூன் 13 – டொயோடா கார்களின் ஏர்பேக் அமைப்பில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக உலக அளவில் சுமார் 2.27 மில்லியன் கார்களை டொயோடா நிறுவனம் திரும்ப பெறுவதாக கடந்த புதன் கிழமை அறிவித்துள்ளது. பல ஆண்டுகளாக கார்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் சிறந்து விளங்கி வரும் டொயோடா நிறுவனம் சமீப காலமாக அதன் நம்பகத்தன்மையை இழந்து வருகின்றது.
டொயோடா நிறுவனம் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 9 மில்லியன் கார்களை திரும்ப பெற்றுள்ளது. இவை அனைத்திலும் பெரும்பான்மையாக பாதுகாப்பு குறைபாடுகளே உள்ளன. கோரோல்லா சேடன், யாரிஸ் உட்பட 20 ரக கார்கள் இந்த குறைபாடுகளின் பட்டியலில் உள்ளன.
இது பற்றி டொயோடாவின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “டொயோடா கார்களின் ஏர்பேக் அமைப்பில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக தீ விபத்துகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
அதனால் உலக அளவில் 1.62 மில்லியன் கார்களையும், ஜப்பானில் 650,000 கார்களையும் திரும்ப பெற நிறுவனம் முயற்சித்து வருகின்றது. ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒரு வாடிக்கையாளரின் சீட் பெல்ட், இந்த குறைபாட்டின் காரணமாக எரிந்து போனதாக வந்த புகாரினைத் தொடர்ந்து இந்த அறிவிப்புகளை டொயோடா அறிவித்துள்ளது” என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் டொயோடா நிறுவனம் உற்பத்தி மற்றும் விற்பனையில் பெரும் முன்னேற்றம் கண்டிருந்தாலும், பயணர்களின் பாதுகாப்பிற்கான நம்பகத்தன்மையில் கவனத்துடன் செயல்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் வரும் வருடங்களில் டொயோடா விற்பனையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்து என்று கூறப்படுகின்றது.