பனாஜி, ஜூன் 14 – இந்திய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றன. இதனால் கடற்படை வீரர்கள் பலர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவை நாட்டுக்கு நாளை அர்ப்பணித்து வைத்து அதில் பிரதமர் நரேந்திரமோடி பயணிக்க உள்ளார்.
கடந்த மாதம் 26-ஆம் தேதி பிரதமராக பதவியேற்ற மோடி முதல் அரசு முறை பயணமாக ஐ.என்.எஸ். விக்ரமாதித்யாவை நாட்டுக்கு அர்பணி்க்கும் விழாவில் கலந்து கொள்ள உள்ளார்.
ரஷ்யா நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட சுமார் 44 ஆயிரத்து 500 டன் எடை கொண்ட போர் கப்பலை நாட்டிற்கு அர்பணிக்கும் விழாவில் மோடி கலந்து கொள்கிறார்.
கோவா அருகே அரபிக்கடலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள விக்ரமாதித்தயா கப்பலில் நடைபெறும் விழாவிற்கு பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் வந்து இறங்க உள்ளதாகவும் தொடர்ந்து கப்பலை சுற்றிப்பார்ப்பதுடன் மற்ற போர்க் கப்பல்கள், விமானங்களின் சாகச நிகழ்ச்சிகளையும் கண்டுகளிக்க உள்ளனர்.
பின்னர் கப்பல் மாலுமிகள் மற்றும் ஊழியர்களிடையேயான பிரதமரின் கலந்துரையாடலும் இடம் பெற உள்ளது என பாதுகாப்புத் துறை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
ஆசியாவிலேயே இரண்டு அதி நவீன போர்க்கப்பல்களை வைத்துள்ள ஒரே நாடு என்ற பெருமை கொண்ட இந்தியாவிற்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 284 நீளம் 60 மீட்டர் உயரம் கொண்டது. 3 கால்பந்து மைதானங்களுக்கு ஈடான பரப்பளவைக் கொண்டதாகும்.
இக்கப்பலில் சுமார் ஆயிரத்து 600 பயணிகள் வரை பயணிக்க முடியும். இதில் இருந்து போர் விமானங்கள் புறப்பட்டுச் சென்று எதிரியின் இலக்கை தாக்கி அழித்து விட்டு, மீண்டும் இதே கப்பலில் வந்து தரையிறங்கும் வசதி உள்ளது. இந்தக் கப்பல் ரஷ்யாவிடமிருந்து 15 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்து வாங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.