நடிகை பிரீத்தி ஜிந்தா கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் ஒரு உரிமையாளராக உள்ளார். அவரது முன்னாள் ஆண் நண்பரான நெஸ் வாடியாவும் தற்போது ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடும் பஞ்சாப் அணியின் மற்றொரு உரிமையாளராக இருந்து வருகிறார்கள்.
பிரீத்தி ஜிந்தா பஞ்சாப் அணி இடம் பெறும் ஐ.பி.எல். போட்டிகளில் தவறாமல் கலந்து கொண்டு ரசிகர்கள் மற்றும் அணியின் கிரிக்கெட் வீரர்கள் உற்சாகமடைய செய்வார். இந்நிலையில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அணியின் மற்றொரு உரிமையாளர் நெஸ் வாடியா மீது புகார் கொடுத்துள்ளார்.
கடைசியாக நடந்து முடிந்த ஐ.பி.எல் போட்டியில் மே மாதம் 30 தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் அணியும் மோதின. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. அப்போது தனக்கு நெஸ் வாடியா பாலியல் தொந்தரவு தந்ததாக பிரீத்தி ஜிந்தா மும்பையிலுள்ள மெரைன் டிரைவ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
39 வயதாகும் பிரீத்தி ஜிந்தா தனது புகாரை கடந்த வியாழன் அன்று கொடுத்துள்ளார் என்று போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக ஏன் இவ்வளவு நாட்களாக பிரீத்தி ஜிந்தா போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை என்பது குறித்தான கேள்விக்கு போலீஸ் அதிகாரி பதில் அளித்தார்.
சம்பவம் நடந்ததை அடுத்து ஜிந்தா நகரின் வெளியே போக வேண்டியிருந்தது எனவே அவர் முன்னதாக புகார் அளிக்கவில்லை. அவர் எப்போது திரும்பி வந்தாரோ அப்போது தனது புகாரை அளித்துள்ளார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.