டில்லி, ஜூன் 14 – மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தை நிர்வாகம் செய்வது கடினமான விஷயம் என்பதால் தான் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக ஒரு கருத்து உள்ளது.
இந்நிலையில், நிர்வாக நலனுக்காக உத்திரப் பிரதேசத்தை இரண்டாகப் பிரித்து புதிய மாநிலம் அமைக்கும் முயர்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சகம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. முதல்வராக அகிலேஷ் யாதவ் பதவி வகிக்கிறார். சமீபகாலமாக அங்கு பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்துள்ளன. உள்ளூர் பாஜக தலைவர்கள் இரண்டுபேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
முசாபர்நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் மதக் கலவரங்களும் அவ்வப்போது ஏற்படுகின்றன. இதனால் அரசை கலைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை எதிர்க்கட்சிகள் கிளப்பியுள்ளன.
முசாபர்நகர் கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பாஜக சட்டமன்ற உறுப்பினர் சங்கீத்சோம் கூறுகையில்,”உத்தரபிரதேச நிலவரம் மிக மோசமாகியுள்ளது. மத்திய அரசு தலையிடாவிட்டால் இந்த நிலை இன்னும் மேலும் மோசமாகும்.
பாஜக தலைவர்கள் சுடப்படுகிறார்கள் என் மக்களை கொலை செய்வதையும், பலாத்காரம் செய்வதையும் பார்த்துக் கொண்டு என்னால் அமைதியாக இருக்க முடியாது. தெருவில் இறங்கி போராட்டம் நடத்துவேன்.
உ.பி.யில் நடைபெற்று வரும் ஆட்சி குறித்து மத்திய அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றார். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நேற்று உ.பி மாநில போலீஸ் டிஜிபி அல் பானர்ஜி, உள்துறை முதன்மை செயலாளர் தீபக்சிங்கால் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது மாநிலத்தை இரண்டாகப் பிரிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது என பாஜக சட்டமன்ற உறுப்பினர் சங்கீத்சோம் கூறியுள்ளார்.