Home நாடு பங்சார் இராமலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு, பாலகிருஷ்ணன் தலைமையில் புதிய நிர்வாகம் நியமனம்!

பங்சார் இராமலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு, பாலகிருஷ்ணன் தலைமையில் புதிய நிர்வாகம் நியமனம்!

673
0
SHARE
Ad

Ramalingeswarar-temple-440-x-215கோலாலம்பூர், ஜூன் 15 – கோலாலம்பூரின் பிரபல சிவன் ஆலயங்களில் ஒன்றான பங்சாரிலுள்ள ஸ்ரீ இராமலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு புதிய நிர்வாகம் நியமிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக ஆண்டுக் கூட்டம் நடத்தாதது, முறையாக கணக்கறிக்கைகள்  சமர்ப்பிக்காதது போன்ற காரணங்களால் சங்கப் பதிவிலாகாவினால், இராமலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பதிவை சில மாதங்களுக்கு முன்னால் சங்கப் பதிவிலாகா ரத்து செய்தது.

சங்கப் பதிவிலாகாவின் முடிவை எதிர்த்து முன்னாள் ஆலய நிர்வாகத்தினர் சமர்ப்பித்த மேல் முறையீட்டையும் சங்கப் பதிவிலாகா நிராகரித்தது.

#TamilSchoolmychoice

அந்த முடிவைத் தொடர்ந்து, அந்த ஆலயத்தின் சொத்துக்கள் அனைத்தும்  தேசிய சொத்துடமை இலாகாவின் (Official Assignee) பராமரிப்பின் கீழ் ஒப்படைக்கப்பட்டது.

இருப்பினும் ஆலயத்தின் நடவடிக்கைகள், பூஜைகள் யாவும் பாதிக்கப்படாத வண்ணம், ஆலயத்தின் பணிகள் தொடர்ந்து நடத்தப்படுவதையும் தேசிய சொத்துடமை இலாகா உறுதி செய்தது.

புதிய தலைவராக (ஷெல்) இரா.பாலகிருஷ்ணன் பொறுப்பு

ஆலயத்தின் நடவடிக்கைகளுக்காகவும், சொத்துக்களை பராமரிக்கவும் பங்சார் அருள்மிகு ஸ்ரீ இராமலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகம் என்ற பெயரில் ஒரு சங்கம் பதிவு செய்யப்பட்டு அதன் தலைவராக ஷெல் பாலா என அழைக்கப்படும் இரா.பாலகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பாலகிருஷ்ணன், இராமலிங்கேஸ்வரர் ஆலயத்தின் நீண்ட கால உறுப்பினர் என்பதோடு, ஏற்கனவே அந்த ஆலயத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், பழைய நிர்வாகத்திற்கும், புதிய நிர்வாகத்திற்கும் இடையில் சமரசப் பேச்சு வார்த்தைகள் நடத்துவதற்கு டத்தோ ஆர்.ரமேஷ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆலயத்தின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள இரா.பாலகிருஷ்ணன் கூடிய விரைவில் ஆலயத்தின் விவகாரங்கள் தீர்க்கப்பட்டு, அதன் முறையான சமய நடவடிக்கைகளும் சேவைகளும், தடங்கலின்றி தொடரும் எனவும், ஆண்டுக் கூட்டங்கள், கணக்கறிக்கைகள்  என அனைத்தும் இனி முறையாக நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.