Home நாடு 118 ஆண்டு பழமை வாய்ந்த பங்சார் ஸ்ரீ இராமலிங்கேசுவரர் ஆலயத்தின் பதிவை சங்கப் பதிவிலாகா ரத்து...

118 ஆண்டு பழமை வாய்ந்த பங்சார் ஸ்ரீ இராமலிங்கேசுவரர் ஆலயத்தின் பதிவை சங்கப் பதிவிலாகா ரத்து செய்தது!

951
0
SHARE
Ad

Ramalingeswarar temple 2 - 440 x 215கோலாலம்பூர், மார்ச் 15 – 118 ஆண்டுகள் பழமை வாய்ந்த பங்சார் ஸ்ரீ இராமலிங்கேசுவரர் ஆலயத்தின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக மலேசிய சங்கப் பதிவிலாகா அறிவித்திருக்கின்றது என்பதை செல்லியல் தகவல் ஊடகத்திற்கு கிடைக்கப்பெற்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

ஆனால், ஆலயத்தின் ஆகம விதிப்படி பூஜைகள், பிரார்த்தனைகள், வழிபாடுகள் என மற்ற பணிகள் யாவும் வழக்கம் போல் நடைபெற்று வரலாம் என சங்கப் பதிவிலாகா ஆலயத்திற்கு அறிவுறுத்தி உள்ளதாகவும் ஆலய வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த 13 பிப்ரவரி 2014ஆம் தேதியிட்ட கடிதத்தின் வழி சங்கப் பதிவிலாகா ஆலயத்தின் ரத்து செய்யும் ஆணையைப் பிறப்பித்துள்ளது என்றும் அறியப்படுகின்றது. ஆனால் இது குறித்து ஆலய நிர்வாகத்திடமிருந்து இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆலயத்தின் பதிவு ரத்தாகியுள்ளது என்பதால் ஆலயத்தின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாகவும் ஆலய நிர்வாகத்திற்கு தொடர்புள்ளவர்கள் செல்லியலிடம் தெரிவித்துள்ளனர்.

பதிவு ரத்து ஏன்?

பெயர் குறிப்பிட விரும்பாத ஸ்ரீ இராமலிங்கேசுவரர் ஆலய நிர்வாகத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவர், இந்த விவகாரம் குறித்து விளக்கமளிக்கையில்,  ஆலய நிர்வாகம் 2010 முதற்கொண்டு கடந்த நான்கு ஆண்டுகளாக ஆண்டுக் கூட்டத்தை நடத்தவில்லை என்றும் அதன் காரணமாக, ஆலயத்தின் கணக்கறிக்கைகளும் சில ஆண்டுகளாக தணிக்கை செய்யப்பட்டு சங்கப் பதிவிலாகாவிடம் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். இது ஆலயத்தின் சட்டவிதிகளுக்கும் மலேசிய சட்டங்களுக்கும் முரணானது ஆகும்.

இதனால், ஆண்டுக் கூட்டங்கள் நடத்தாதது, கணக்கறிக்கைகள் சமர்ப்பிக்கப்படாதது போன்ற காரணங்களுக்காக ஏன் ஆலயத்தின் பதிவு ரத்து செய்யப்படக்கூடாது என காரணம் கோரும் கடிதம் ஒன்றை ஆலய நிர்வாகத்திற்கு சங்கப் பதிவிலாகா கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பரில் அனுப்பியிருந்தது.

ஆலயத்தின் சட்டவிதிகளின்படி, 2011ஆம் ஆண்டுக்கான தேர்தலை நடத்தி புதிய செயலவையைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கையையும் ஆலய நிர்வாகம் ஏனோ இதுவரை மேற்கொள்ளவில்லை.

மேலும், ஆலய சட்டவிதிகளுக்கு எதிராக கோலாலம்பூருக்கு வெளியே வசிக்கும் ஒருவரை ஆலய செயலாளராகவும் ஆலய நிர்வாகம் நியமித்திருக்கிறது என்றும் சங்கப் பதிவிலாகா தனது காரணம் கோரும் கடிதத்தில் சுட்டிக் காட்டியிருந்தது.

ஸ்ரீ இராமலிங்கேசுவரர் ஆலயத்தை நிர்மாணித்தது மலாயன் இரயில்வே இலாகாவின் இந்திய ஊழியர்கள் என்பதால் இந்த ஆலயத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் என மூன்று பதவிகளை வகிப்பவர்கள் எப்போதும் நடப்பு அல்லது முன்னாள் ரயில்வே ஊழியர்களாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் கோலாலம்பூரில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும் என்றும் ஆலயத்தின் சட்டவிதிகள் குறிப்பிடுகின்றன.

தனது காரணம் கோரும் கடிதத்தில் மேலும் சில விளக்கங்களை சங்கப் பதிவிலாகா ஆலய நிர்வாகத்தைக் கேட்டிருக்கின்றது. வங்கியில் நிரந்தர கையிருப்பாக வைக்கப்பட்டிருந்த மலேசிய ரிங்கிட் 1,115,191 தொகையை ஆண்டுக்கூட்டத்தின் ஐந்தில் நான்கு பகுதி உறுப்பினர்களின் அனுமதியின்றி ஏன் ஆலய நிர்வாகம் வங்கியிலிருந்து வெளியே எடுத்தது என்றும் சங்கப் பதிவிலாகா விளக்கம் கேட்டிருந்தது.

இந்த காரணம் கோரும் கடிதத்திற்கு விளக்கங்களை ஆலய நிர்வாகமும் அனுப்பியிருக்கின்றது. ஆனால் அந்த விளக்கங்களால் சங்கப் பதிவிலாகா  திருப்தியடையவில்லை.

ஆலய பதிவை ரத்தாக்கும் கடிதம்

Ramalingeswarar temple 440 x 215ஆலயத்தின் விளக்கங்களால் திருப்தியடையாத சங்கப் பதிவிலாகா கடந்த 13 பிப்ரவரி 2014ஆம் தேதியிட்ட கடிதத்தின் வழி ஆலயத்தின் பதிவை ரத்தாக்கும் முடிவை ஆலய நிர்வாகத்திற்கு தெரிவித்துள்ளது. இந்த முடிவுக்கு எதிராக மேல் முறையீடு செய்ய ஆலய நிர்வாகத்திற்கு 30 நாட்கள் அவகாசம் சட்டரீதியாக தரப்பட்டிருக்கின்றது. இந்த காலக்கெடு 13 மார்ச் 2014ஆம் தேதியோடு முடிவடைந்து விட்டது.

இருப்பினும் சங்கப் பதிவிலாகா முடிவுக்கு எதிராக ஆலய நிர்வாகம் இதுவரை மேல் முறையீடு ஏதும் செய்துள்ளதா என்பது குறித்து ஆலய தரப்பிலிருந்து எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.

ஆனால், ஆலய நிர்வாகத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள், மேல் முறையீட்டை ஆலய நிர்வாகம் அனுப்பியிருப்பதாக தெரிவித்திருக்கின்றார்கள்.

கடந்த 118 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நாட்டின் பழமையான ஆலயமான ஸ்ரீ இராமலிங்கேசுவரர் ஆலயம், தலைநகர் பங்சார் பகுதியின் மாரோப் சாலையில் அமைந்திருக்கின்றது.

சிவன் ஆலயமான இந்த ஆலயத்தில் வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்குரிய பூஜைகள் பிரபலம் என்பதோடு அந்த நாட்களில் அதிகமான பக்தர்கள் இந்த ஆலயத்தில் கூடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆலயத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ள நிலையில் இனி இந்த ஆலயத்தின் நிலைமை என்னவாகும் என்பது உடனடியாகத் தெரியவில்லை.

இதனால் ஒரு பின்விளைவாக உத்தேசமாக என்ன நடக்கும் என்றால் ஆலயத்தின் சொத்துக்களும், நிர்வாகமும் மலேசிய திவால் இலாகாவின் (Malaysian Insolvency Department)கீழ் வைக்கப்பட்டு, ஆலயத்திற்கென புதிய நிர்வாகம் ஆண்டுக் கூட்டத்தின் வழி தேர்ந்தெடுக்கப்படும் வரை  பராமரிக்கப்படும்.

ஆலயத்தின் பதிவை ரத்து செய்யும் கடிதத்தின் நகல் ஒன்றை சங்கப் பதிவிலாகா மலேசிய திவால் இலாகாவிற்கும் அனுப்பியிருக்கின்றது என்பதிலிருந்து அநேகமாக இந்த பின்விளைவுதான் நிகழும் என்ற கருத்து நிலவுகின்றது.