Home நாடு MH 370 – விமானி சஹாரியின் வீட்டை காவல் துறை சோதனையிட்டது!

MH 370 – விமானி சஹாரியின் வீட்டை காவல் துறை சோதனையிட்டது!

549
0
SHARE
Ad

MH 370 Zaharie 440 x 215மார்ச் 15 – காணாமல் போன MH 370 விமானம் கடத்தப்பட்டிருக்கக் கூடும் என்ற தகவல்கள் வெளியாகியிருப்பதைத் தொடர்ந்து அந்த விமானத்தின் விமானியான கேப்டன் சஹாரியின் வீட்டில் காவல் துறையினர் சோதனை நடத்தி உள்ளனர்.

#TamilSchoolmychoice

காணாமல் போன MH 370 விமானத்தின் பாதையைத் தெரிவிக்கும் டிரான்போன்டர்  கருவியை விமானத்தில் இருந்தவர்கள்தான் வேண்டுமென்றே நிறுத்தியிருக்கின்றார்கள் என்றும் அதனால் விமானம் கடத்தப்பட்டிருக்கும் சாத்தியம் அதிகரித்திருக்கின்றது என்றும் புலனாய்வுத் துறையினர் கண்டுபிடித்திருப்பதைத் தொடர்ந்து, அந்த விமானத்தில் இருந்த பயணிகள், விமானிகள், விமானப் பணியாளர்கள் என அனைவரும் தற்போது காவல் துறையினரின் கண்காணிப்பிற்கும், புலனாய்வுகளுக்கும் உள்ளாகியிருக்கின்றார்கள்.

விமானி சஹாரியின் வீடு மலேசியக் காவல் துறையினரால் முற்றுகையிடப்பட்டிருப்பதாக அமெரிக்காவின் சிஎன்என் தொலைக்காட்சி படங்களோடு செய்திகள் வெளியிட்டிருக்கின்றது.

இந்த விமானியின் வீட்டில் சிமுலேட்டர் (Simulator) எனப்படும் போயிங் 777 விமானத்தை இயக்குவதற்கான மாதிரி விமானி அறை போன்ற பகுதி நிர்மாணிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. காணாமல் போனதும் சஹாரி செலுத்திய போயிங் 777  விமானம்தான் என்ற நிலையில் ஏன் அவர் இப்படி ஒரு மாதிரி அறையை வீட்டில் நிர்மாணித்தார் என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

விமானம் செலுத்துவதில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்த அந்த விமானி தனது பொழுது போக்கிற்காக இப்படி ஒரு மாதிரியை நிர்மாணித்திருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகின்றது.

மாதிரி விமானி அறையில் சஹாரி இருப்பது போன்ற புகைப்படம் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டிருப்பதால், அவர் இந்த நடவடிக்கையை இரகசியமாக செய்திருக்கவில்லை என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அந்த புகைப்படத்தில், மாதிரி விமானி அறையோடு, மூன்று கணினிகள், கணினித் திரைகள், கம்பிகளுடன் கூடிய தொலைத் தொடர்புக் கருவிகளும் இணைக்கப்பட்டிருப்பது தெரிகின்றது.

ஷா ஆலாமில் வசிக்கும் 53 வயதான சஹாரி அகமட் ஷா மிகுந்த சமூக அக்கறை கொண்டவர் என்றும் அவரை நம்பி தாராளமாக விமானத்தில் ஏறலாம் என்றும் காரணம் விமானப் பயணிகளுக்கு ஏதாவது ஒன்று என்றால் தனது உயிரைப் பணயம் வைத்து செயலாற்றக் கூடிய மனோபலம் கொண்டவர் அவர் என அவரது அண்டை வீட்டார் கூறியதாகவும் சிஎன்என் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் பிரதமர் நஜிப், விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற தகவலை வெளியிட்ட பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு சிறிது நேரத்திற்குப் பின்னர் உடனடியாக காவல்துறையினர் சஹாரியின் வீட்டை முற்றுகையிட்டு சோதனை நடத்தினர்.

காணாமல் போன விமானம் பற்றி தகவல்கள் ஏதும் கிடைக்குமா எனத் துப்பு துலக்கவே காவல் துறையின் வீட்டை சோதனையிட்டதாக பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக மலேசியாகினி செய்தி வெளியிட்டுள்ளது.

பினாங்கில் பாலிக் புலாவில் உள்ள சஹாரியின் குடும்ப இல்லத்தைச் சோதனையிடுவதற்காக தங்களுக்கு இன்னும் ஆணை பிறப்பிக்கப்படவில்லை என்றும் காவல் துறை தலைவரின் கட்டளைக்காக தாங்கள் காத்திருப்பதாகவும் பினாங்கு காவல் துறையின் தலைவர் அப்துல் ரஹிம் ஹனாஃபி தெரிவித்துள்ளார்.