Home அவசியம் படிக்க வேண்டியவை எம்எச் 370: வலியுடன் 100 நாட்கள்! துயரத்தில் பயணிகளின் குடும்பங்கள்!

எம்எச் 370: வலியுடன் 100 நாட்கள்! துயரத்தில் பயணிகளின் குடும்பங்கள்!

510
0
SHARE
Ad

100 Days In Remembrance of MH370கோலாலம்பூர், ஜூன் 15 – 227 பயணிகள், 12 விமானப் பணியாளர்கள் என மொத்தம் 239 பேருடன், மாஸ் விமானம் எம்எச் 370 கடந்த மார்ச் 8 -ம் தேதி மாயமாகி, இன்றோடு 100 நாட்கள் ஆகிவிட்டன.

தொழில் சம்பந்தமாக, உறவுகளை பார்க்க, சுற்றுலாவிற்காக, வேலை இட மாற்றம் என அதில் பயணம் செய்த ஒவ்வொரு பயணியும் ஏதோ ஒரு காரணத்திற்காக, கண்கள் நிரம்பிய கனவுகளுடன் சீனாவின் பெய்ஜிங்கிற்கு பயணம் செய்திருப்பார்கள்.

கோலாலம்பூரில் அதிகாலை விமானம் புறப்படுவதற்கு முன்னால், எத்தனையோ பேர் தங்கள் உறவுகளிடம் பிரியா விடை பெற்றிருப்பார்கள். பெய்ஜிங் விமான நிலையத்தில் எத்தனையோ பயணிகளின் உறவினர்கள் தங்கள் அன்பிற்குரியவர்களின் வரவிற்காக காத்திருந்திருப்பார்கள்.

#TamilSchoolmychoice

ஆனால், அன்றைய நாளில் அத்தனை பேரின் கனவுகளும் விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் கலைந்துவிட்டது. தாய்லாந்து கடல் எல்லையைத் தொட்ட விமானம் அதன் பின்னர் ரேடார் தொடர்பில் இருந்து விலகி மாயமாகிப் போனது.

விமானம் தனது வழக்கமான பாதையில் இருந்து விலகி தென் இந்தியப் பெருங்கடலின் மேல் பறந்து தனது பயணத்தை முடித்துக் கொண்டுள்ளது என்பதை மட்டுமே இன்றைய அதிநவீன தொழில்நுட்பங்கள் கூறுகின்றன.

ஆனால் அதற்கு பின்னால் இருக்கும் தவறுகள் இன்னும் வெளியே தெரியாமல், இன்று வரையில் விமானத்தின் பாகம் என்று கூற ஒரு சிறிய பகுதி கூட கிடைக்காமல் மர்மம் மட்டுமே நீடித்து வருகின்றது.

வலியுடன் 100 நாட்கள்

Chinese relatives of MH370 passengers pray at Lama Temple

உலகின் பெரும்பாலான நாடுகளில் இன்று தந்தையர் தினம் கொண்டாடப்படுகின்றது. ஆனால் இன்றைய தினம் 239 பயணிகளின் உறவினர்களுக்கு 100 நாட்களின் ஒட்டுமொத்த வலியாக மட்டுமே உள்ளது.

தங்களின் உறவினர்கள் மாயமாகி 100 நாட்கள் ஆகிவிட்டதை நினைவு கூறும் நிகழ்வாக சீனாவிலும், மலேசியாவிலும் பிரார்த்தனைகள் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதில் பெரும்பாலான பயணிகளின் உறவினர்கள் கலந்து கொண்டு தங்கள் உறவினர்களை கண்ணீர் மல்க நினைவு கூர்ந்தனர்.

ஹு சுஃபாங் என்பவரின் மகனும், மருமகளும் தங்கள் இரு குழந்தைகளுடன் அந்த விமானத்தில் பயணம் செய்தனர். இப்போது 5 பேரும் ஒன்றாக வாழ்ந்த அந்த வீட்டில் ஹு சுஃபாங் மட்டும் தனிமையில் தன் பேரக் குழந்தைகளின் நினைவுகளுடன் வாடுகிறார்.

இன்னொரு சீனப் பயணி ஒருவரின் தாய் வென் கூறுகையில், “உயிரோடு இருக்கிறார்கள் என்றால் அவர்களை பார்க்க வேண்டும். அல்லது இறந்து விட்டார்கள் என்றால் அவர்களது உடலையாவது பெற வேண்டும். இதைத் தான் நாங்கள் கேட்கின்றோம்” என்கிறார்.

விமான மேற்பார்வையாளர்களுள் ஒருவரான பேட்ரிக் பிரான்சிஸ் கோம்ஸின் மகன் நிக்கோலெட் கோம்ஸ் கூறுகையில், தன் 3 வயது மகன், தினமும் உறங்கச் செல்லும் முன் இன்று இரவு 10 மணியளவில் தன் தாத்தா திரும்பி வந்துவிடுவார் என்று கூறுவதாக  தெரிவித்துள்ளார்.

100 Days In Remembrance of MH370

என்ன தான் நஷ்ட ஈடும், காப்பீட்டுப் பணமும் கொடுத்து பயணிகள் குடும்பத்தினரின் பொருளாதார சிக்கலைத் தீர்த்தாலும், தாயையோ, தந்தையையோ, ஆசை கணவனையோ, அன்பு மகனையோ, செல்ல மகளையோ, பேரக்குழந்தைகளையோ பறிகொடுத்துவிட்டு அவர்களின் உடலைக் கூட பெற இயலாத நிலையில் இருக்கும் உறவினர்களின் துயரத்தினை விவரிக்க வார்த்தைகள் இருக்காது. அவர்களின் துயரத்திற்கு காலத்தால் மட்டுமே பதில் சொல்ல முடியும்.

ஃபீனிக்ஸ்தாசன்

படங்கள்: EPA