வாஷிங்டன், ஜூன் 16 – அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பிரபல குளிர்பான நிறுவனமான கோக்கோ கோலா மீது போலியான விளம்பரங்கள் மூலம் வருவாயை பெருக்க நினைப்பதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் தயாரிப்பான மினிட் மெய்டில் சிறிதளவே சேர்க்கப்பட்டுள்ள மாதுளை மற்றும் அவுரி நெல்லி சாற்றினை விளம்பரத்தில் பிரதானப்படுத்தி, விலை குறைவாக விற்கப்படுவதாக சமீபத்தில் புகார் செய்யப்பட்டது.
இது குறித்து புகார் தெரிவித்துள்ள மாதுளை உற்பத்தியாளர்கள் அமைப்பான பொம் ஒண்டர்புல் நிறுவனம் கூறுகையில், “85 சதவிகிதம் மாதுளை சாறும், 15 சதவிகிதம் அவுரிநெல்லி சாறும் கலந்த தங்களின் தயாரிப்பை மறைக்கடிக்க கோக்கோ கோலா நிறுவனம், அதிகமான மாதுளை மற்றும் அவுரிநெல்லி சேர்க்கப்பட்டதாக போலியான விளம்பரத்தின் மூலமாக வாடிக்கையாளர்களைக் கவர நினைக்கின்றது” என அந்நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.
இந்த வழக்கு கடந்த வியாழக்கிழமை அன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி அந்தோணி கென்னடி, “கோக்கோ கோலாவின் தயாரிப்பில் 99.4 சதவிகிதம் ஆப்பிள் மற்றும் திராட்சை பழ சாறும், 0.5 சதவிகிதமே மாதுளை மற்றும் அவுரிநெல்லி சாறும் கலந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் பொம் வொண்டர்புல் நிறுவனம் கோக்கோ கோலா நிறுவனத்தின் மீது வழக்கு தொடர அனுமதிப்பதாக நீதிபதிகள் குழு தெரிவித்துள்ளது.