கோலாலம்பூர், டிசம்பர் 28 – கொக்கோ-கோலா நிறுவனம் உலக அளவில் 2000 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பிரபல குளிர்பான நிறுவனமான கொக்கோ கோலா கடந்த அக்டோபர் மாதம், மூன்றாம் காலாண்டு தொடர்பான அறிக்கையை வெளியிட்டது. அதில் சுமார் 14 சதவீதம் அளவிற்கு வர்த்தக சரிவு ஏற்பட்டதால் அந்நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது.
இந்நிலையில், அந்நிறுவனம் 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான செலவினங்களை குறைப்பதற்காக தொழிலாளர்களின் பணி நீக்கத் திட்டத்தினை செயல்படுத்த இருப்பதாக கூறப்படுகின்றது.
இந்த பணி நீக்கம் தொடர்பான அறிவிப்புகளை உலக அளவில் உள்ள கிளைகளுக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 15-ம் தேதிக்குள்ளும், வட அமெரிக்க தொழிலாளர்களுக்கு ஜனவரி 8-ம் தேதிக்குள்ளும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க அந்நிறுவனம் தீர்மானித்துள்ளதாக கொக்கோ கோலா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக கொக்கோ-கோலா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “கொக்கோ-கோலாவின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் பற்றி நிறுவன பணியாளர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் பல தொழிலாளர்களின் பணி நீக்கத்திற்கு வழிவகுக்கலாம்” என்று அவர் கூறியுள்ளார்.