கொழும்பு, ஜூன் 16 – போலி ஆவணங்களை பயன்படுத்தி தலிபான் தீவிரவாதிகள் இலங்கைக்குள் ஊடுருவி வருகின்றனர் என்றும் அவர்கள் கடத்தல் மற்றும் பிற சட்டவிரோத செயல்களை அப்பகுதியை சேர்ந்தவர்களுடன் இணைந்து செய்கின்றது என்று சர்வதேச காவல்துறையான இண்டர்போல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் தலிபான் தீவிரவாதிகள் செயல்பட்டு வருவதாக அந்நாட்டு புலனாய்வுத் துறைக்கு இண்டர்போல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக இண்டர்போல் இலங்கை அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளனர்.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளில் தலிபான் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அரசுக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை நடத்தி மக்களை நிலைகுலைய செய்து வருகின்றனர்.
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும் தீவிரவாதிகளை ஒழிக்க அப்பகுதியில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே தலிபான் இயக்கம் மத்தியகிழக்கு நாடுகளில் பரவி வருகிறது. இந்நிலையில் தீவிரவாத செயல்பாடுகளில் ஈடுபட இலங்கையை தலிபான்கள் ஒரு தளமாக பயன்படுத்தி வருவதாக இண்டர்போல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் அதிகரித்து வருவதாகவும் அவர்களின் நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகவும் பயங்கரவாத தடுப்பு நிபுணரும் பேராசிரியருமான ரொகன் குணரத்னா செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்தார்.