பாக்தாத், ஜூன் 17 – ஈராக்கில் ஷியா பிரிவினரின் தலைமையிலான அரசுக்கு எதிராக சன்னி பிரிவு தீவிரவாதிகள் உள்நாட்டு போரில் ஈடுபட்டுள்ளனர். பல முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள தீவிரவாதிகள் இராணுவத்துக்கு எதிராக கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.
தீவிரவாதிகளைத் தடுக்க அமெரிக்கா விமானம் தாங்கிய போர்கப்பலை ஈராக்குக்கு அனுப்பியுள்ளது.
இந்நிலையில் போரின் போது இராணுவ வீரர்கள் பலரை பணையக் கைதிகளாக பிடித்து சென்ற தீவிரவாதிகள், அவர்களில் 1700 பேரை சுட்டுக் கொன்று விட்டதாக அறிவித்துள்ளனர்.
அவர்களது வேலயத் சலாஹூதீன் இணைய தளத்தில் இத்தகவலை வெளியிட்டுள்ளனர். மேலும், இராணுவ வீரர்களை வரிசையாக குனிய வைத்து துப்பாக்கியால் கொடூரமாக சுட்டுக் கொல்வது போன்ற புகைப்படங்களும் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
சலாஹூத்தீன் மாகாணத்தில் ஒரு மறைவிடத்தில் வைத்து கொலைகள் அரங்கேற்றப் பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அப்பகுதியில் பெரிய அளவில் மொத்தமாக இறுதிச் சடங்குகள் நடந்ததாக தகவல்கள் எதுவும் இல்லை. எனவே, இதனை உண்மையா என உறுதிப்படுத்த முடியவில்லை.
சன்னி தீவிரவாதிகளுக்கு எதிராக போராட ஷியா பிரிவினரும் ஆயுதம் ஏந்த வேண்டும் என மதகுரு அயாதுல்லா அலின அல்– சிஸ்தானி கடந்த சில நாட்களுக்கு முன்னர் அழைப்பு விடுத்தார். அதை ஏற்று ஏராளமானவர்கள் திரண்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த தீவிரவாதிகள் இராணுவ வீரர்களை சுட்டுக் கொன்றுள்ளனர்.